இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டம்
October 11 , 2025 13 hrs 0 min 12 0
இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 08 ஆம் தேதியன்று மத்திய மற்றும் மாநிலக் கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் 2021 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளரின் திட்டத்தின் (RB-IOS, 2021) கீழ் கொண்டு வந்தது.
1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் 35Aவது பிரிவின் கீழ் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
RB-IOS, 2021 ஆனது, ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு விரைவான, செலவு குறைந்த மற்றும் மாற்றுக் குறை தீர்ப்பு நெறிமுறையை வழங்குகிறது.
இந்தத் திட்டமானது, முதலில் 50 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட வைப்புத் தொகைகளைக் கொண்டிருந்த அனைத்து வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
இதில் 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்கள் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடுகள் கொண்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும்/NBFC (வீட்டுக் கடன் நிறுவனங்கள் தவிர) அடங்கும்.
2007 ஆம் ஆண்டு பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் கீழ் உள்ள ஓர் அமைப்பின் ஒப்பந்தம் சார் பங்கேற்பு நிறுவனங்கள் மற்றும் கடன் தகவல் நிறுவனங்களும் இதில் அடங்கும்.
RB-IOS, 2021 ஆனது முன்னதாக உள்ள மூன்று திட்டங்களை ஒன்றிணைத்தது:
வங்கி அமைப்பின் குறைதீர்ப்புத் திட்டம், 2006;
NBFC குறைதீர்ப்புத் திட்டம், 2018; மற்றும்
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறைதீர்ப்புத் திட்டம், 2019.
இந்தத் திட்டமானது, 'ஒரு நாடு ஒரு குறைதீர்ப்புத் திட்டம்' கொள்கையைப் பின்பற்றுகிறது".
குறைதீர்ப்பாளர் 20 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க முடியும் என்பதோடு மேலும் புகார்தாரரின் நேர விரயம், செலவினங்கள் அல்லது மன உளைச்சலுக்காக 1 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க முடியும்.