ஐக்கிய நாடுகளின் காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில், இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் இலக்கை 450 ஜிகாவாட்டாக அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் இலக்கு 2022 ஆம் ஆண்டிற்குள் 175 ஜிகாவாட்டாக இருந்தது.
தண்ணீரைப் பாதுகாப்பதற்கும் மழைநீரைச் சேகரிப்பதற்கும் நீர்வளங்களை மேம்படுத்துவதற்கும் ஜல் ஜீவன் திட்டத்திற்காக சுமார் 50 பில்லியன் டாலர் நிதியை “அடுத்த சில ஆண்டுகளில்” செலவழிக்க இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா தொடங்கிய சர்வதேச சூரிய சக்திக் கூட்டிணைவில் (International Solar Alliance) 80 நாடுகள் ஏற்கனவே இணைந்துள்ளன.
உச்சி மாநாடு பற்றி
2019 ஆம் ஆண்டின் ஐ.நா. காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடானது ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸால் நியூயார்க்கில் நடத்தப்பட்டது.
இளம் வயது காலநிலை மாற்ற ஆர்வலரான ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்பவர் இந்த உச்சி மாநாட்டைத் திறந்து வைத்தார்.
இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சுமார் 63 நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சார்பாக பிரதமர் மோடி தலைமையிலான இந்தியக் குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட நாடுகள் 2015 ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அந்த நாடுகளின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை அல்லது அந்த நாடுகளின் காலநிலை செயல் திட்டத்தை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மாநாடு ஏன் முக்கியமானதாக விளங்குகின்றது?
ஐ.நா. மதிப்பீடுகளின் படி, காலநிலை மாற்றத்தை 1.5°C என்ற அளவிற்குள் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் தங்களுடைய முயற்சிகளை ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும்.
இந்த அளவிற்கு மேலான வெப்பநிலை உயர்வானது மிகப்பெரிய மற்றும் மீளமுடியாத சேதத்திற்கு வழிவகுக்கும்.