இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு - தொலைநோக்குக் கொள்கை 2035
July 29 , 2025 10 hrs 0 min 15 0
ஐக்கியப் பேரரசு மற்றும் இந்தியாவின் பிரதமர்கள் 2035 ஆம் ஆண்டு இந்தியா- ஐக்கியப் பேரரசு தொலைநோக்குத் திட்டத்தினை இலண்டனில் வெளியிட்டனர்.
இந்தத் திட்டமானது வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி மற்றும் பருவநிலை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான 10 ஆண்டு காலத் திட்டமாகும்.
விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) எனப்படும் இந்தியா- ஐக்கியப் பேரரசு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்ட உடனேயே இந்த அறிவிப்பு வெளிவந்தது.
2030 ஆம் ஆண்டிற்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தினை சுமார் 56 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பதே FTA ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
2035 ஆம் ஆண்டு தொலைநோக்குத் திட்டமானது, தெளிவான காலக்கெடுவையும், முன்னேற்றத்தைக் கண்காணிக்க வழக்கமான மதிப்பாய்வுகளையும் அமைக்கிறது.
இந்தியாவும் ஐக்கியப் பேரரசும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம், நிதிச் சேவைகள், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் படைப்பாக்கத் தொழில்களில் மிகுந்த ஒத்துழைப்பை அதிகரிக்கும்.
ஐக்கியப் பேரரசு - இந்தியா நிதிக் கூட்டாண்மை உட்பட வணிகப் பேச்சு வார்த்தைகளை ஊக்குவிக்கவும், உள்கட்டமைப்பு முதலீடுகளை ஆதரிக்கவும் இந்த இரு நாடுகளும் தளங்களை உருவாக்க உள்ளன.
ஐக்கியப் பேரரசு-இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) மையத்தை நிறுவும் திட்டங்களுடன் புதுமையில் முக்கியக் கவனம் செலுத்தப் படுகிறது.
துளிமக் கணினி, இணையவெளிப் பாதுகாப்பு, உயிரி தொழில்நுட்பம், குறைக் கடத்திகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இந்த முயற்சிகள் அறிவியல் மற்றும் புத்தாக்கச் சபையினால் வழி நடத்தப் படும்.
ஹைட்ரஜன், மின் கலத் தொழில்நுட்பம், கார்பன் பிடிப்பு, கடற்கரைக் காற்று மற்றும் சிறிய அணு உலைகள் போன்ற சுத்தமான எரிசக்தித் திட்டங்களில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும்.
இந்த முன்னெடுப்புகள் நிகரச் சுழிய புத்தாக்கக் கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும்.
உலக வர்த்தக அமைப்பில் (WTO) உலகளாவிய வர்த்தக விதிகளைச் சீர்திருத்துவதில் இந்தியாவும் ஐக்கியப் பேரரசும் இணைந்து செயல்படும்.
விமானப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தவும், நாடுகளுக்கு இடையே வரி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அவை திட்டமிட்டுள்ளன.
ஐக்கியப் பேரரசின் கார்பன் எல்லை இணக்க முறைமையிலிருந்து (CBAM) இந்தியா விலக்கு பெறவில்லை.
2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், எஃகு மற்றும் அலுமினியம் போன்ற அதிக கார்பன் உமிழ்வு கொண்ட இறக்குமதிகளுக்கு CBAM வரி விதிக்கும்.
இது சுமார் 775 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிகளைப் பாதிக்கலாம்.