இந்தியாவின் அறிவுசார் சொத்துத் தாக்கல்கள் 2020-2025
July 27 , 2025 15 days 39 0
கடந்த ஐந்து ஆண்டுகளில் அறிவுசார் சொத்துத் தாக்கல்களில் இந்தியா கணிசமாக 44% அதிகரிப்பைக் கண்டுள்ளது.
இது முதன்மையாக உத்தி சார் கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான எண்ணிம மயமாக்கல் முன்னெடுப்புகளால் உந்தப்பட்ட ஒரு மேம்பாடாகும்.
இந்தியக் குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த அறிவுசார் சொத்துத் தாக்கல்களுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2020-21 ஆம் ஆண்டில் 477,533 என்ற அளவிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் 689,991 ஆக அதிகரித்தது.
புவிசார் குறியீடுகள் (GI) மேற்கொண்டப் பதிவுகள் சுமார் 380% என்ற அளவிற்கு உயர்ந்த நிலையில் அது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியது.
அதைத் தொடர்ந்து வடிவமைப்புகள் (266%), காப்புரிமைகள் (180%), பதிப்புரிமைகள் (83%), வர்த்தக முத்திரைகள் (28%), மற்றும் குறைக் கடத்திகள் ஒருங்கிணைந்தச் சுற்றுகள் தளவமைப்பு-வடிவமைப்புகள் (SILCLD) (20%) ஆகியன உள்ளன.
முக்கியச் சீர்திருத்தங்களில் அறிவுசார் சொத்துக்களுக்கான சட்டங்கள் மற்றும் அதன் விதிகளை எளிமைப்படுத்துதல், காப்புரிமை ஆவணங்களைக் கட்டாயமாக மின்னணு முறையில் சமர்ப்பித்தல் மற்றும் இயங்கலை வழி காப்புரிமைத் தாக்கல்களுக்கான 10% கட்டணக் குறைப்பு ஆகியவை அடங்கும்.
காப்புரிமைகளுக்கான தேர்வு காலம் 31 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது, மேலும் 'காப்புரிமைகளின் செயல்பாட்டு அறிக்கைகளை' தாக்கல் செய்வதற்கான காலக் கெடு தற்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகும்.
'IP Sarthi Chatbot' மற்றும் தேசிய அறிவுசார் சொத்து விழிப்புணர்வுத் திட்டம் (NIPAM) போன்ற முன்னெடுப்புகள் அறிவுசார் சொத்து மீதான விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
இன்று வரை, 697 புவிசார் குறியீடுகள் வெற்றிகரமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன.