இந்தியாவின் கடல்சார் துறையில், 2023 ஆம் நிதியாண்டில் 819 மில்லியன் டன்களாக இருந்த சரக்குக் கையாளுதல் ஆனது 2024 ஆம் நிதியாண்டில் 855 மில்லியன் டன்களாக உயர்ந்தது.
பத்திரிகைத் தகவல் வாரியத்தின் (PIB) அறிக்கையின்படி, இது 4.3 சதவீத வருடாந்திர வளர்ச்சியைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி முதல் ஐந்து பெரிய துறைமுகங்கள் மொத்தச் சரக்குகளில் 63.12 சதவீதத்தைக் கையாண்டதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுக ஆணையம் (PPA) 13.14 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு, மொத்தச் சரக்குகளில் 18.04 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
குஜராத்தில் உள்ள தீன்தயாள் துறைமுக ஆணையம் (DPA) ஆனது இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிராவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் (VPA) மற்றும் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் (SMP) ஆகியவை முறையே 4வது மற்றும் 5வது இடத்தைப் பிடித்துள்ளன.
முதல் பத்து இடங்களில், தமிழ்நாட்டில் உள்ள சென்னை துறைமுக ஆணையம் (7வது இடம்), காமராஜர் துறைமுக ஆணையம் (8வது இடம்), மற்றும் வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் (9வது இடம்) ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்கள் இடம் பெற்றுள்ளன.