2026-27 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி 44 சதவீதம் அதிகரித்து 31.97 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 22.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் திறன்பேசிகள் தொடர்ந்து மிகப்பெரிய அங்கமாக இருந்தாலும், திறன்பேசி அல்லாத மின்னணுப் பொருட்கள் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
திறன்பேசி ஏற்றுமதி 35.8 சதவீதம் உயர்ந்து, 2025-26 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் 13.38 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி, 2026-27 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் 18.17 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து உள்ளது.
இருப்பினும், மற்ற மின்னணுப் பிரிவுகள் வேகமாக விரிவடைந்ததால், மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் அவற்றின் பங்கு 60.3 சதவீதத்திலிருந்து 56.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
உதிரிபாகங்கள், அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள், தகவல் தொடர்பு சாதனங்கள், நினைவகப் பொருட்கள் மற்றும் சேமிப்பு சாதனங்கள் என ஏற்றுமதிகள் படிப்படியாகப் பல்வகைப்படுத்தப்படுவதை இது சுட்டிக் காட்டுகிறது.
உதிரிபாகங்கள் மற்றும் துணைப் பொருட்களின் ஏற்றுமதியில் சிங்கப்பூர் 1.87 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் முன்னணி இடமாக இருந்தது, அதைத் தொடர்ந்து சீனா 111.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவின் மின்னணு வர்த்தகம் திறன்பேசிகளுக்கு அப்பால் விரிவடைந்து வருவதையும், உதிரிபாகங்கள், அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள், தகவல் தொடர்பு சாதனங்கள், நினைவக ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் சேமிப்பு சாதனங்கள் ஆகியவை ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு அதிகளவில் பங்களிப்பதையும் இந்த ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
திறன்பேசிகள் மிகப்பெரிய ஏற்றுமதிப் பிரிவாக இருந்தபோதிலும், திறன்பேசி அல்லாத மின்னணுப் பொருட்களின் வேகமான விரிவாக்கம், 2026-27 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் காலக் கட்டத்தில் மொத்த ஏற்றுமதியில் அவற்றின் பங்கை 43.2 சதவீதமாக உயர்த்தியது.
இந்தத் தயாரிப்புப் பிரிவுகளில் ஏற்றுமதிகள் அதிகரித்திருப்பதும், சிங்கப்பூர், சீனா, ஹாங்காங் மற்றும் மலேசியா போன்ற சந்தைகளுக்கு ஏற்றுமதிகள் வளர்ந்து வருவதும், இந்தியாவின் ஏற்றுமதி செயல்திறனுக்குப் பரந்த அளவிலான மின்னணுப் பொருட்கள் பங்களிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.