இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தானியச் சேமிப்புத் திட்டம்
July 26 , 2025 12 hrs 0 min 21 0
கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானியச் சேமிப்புத் திட்டத்தினை இந்தியா செயல்படுத்துகிறது.
இது கிராமப்புற வேளாண் உள்கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதையும், நாடு முழுவதும் உள்ள முதன்மை வேளாண் கடன் சங்கங்களை (PACS - Primary Agricultural Credit Societies) மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சிய மிக்க முன்னெடுப்பு ஆகும்.
2023 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டமானது, தற்போது ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இது அடிமட்ட அளவில் தானியச் சேமிப்பு மற்றும் வேளாண் தளவாடங்களை உரு மாற்றும் நோக்கம் கொண்டதாகும்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் எழுத்துப்பூர்வப் பதிலில் இந்தப் புதுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
PACS மட்டத்தில் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்ற இந்தத் திட்டத்தில் கிடங்குகள், தளவாட வாடகை பெறல் மையங்கள், உணவுப் பதப்படுத்தும் மையங்கள் மற்றும் நியாய விலைக் கடைகள் ஆகியவையும் அடங்கும்.
வேளாண் உள்கட்டமைப்பு நிதி (AIF - Agriculture Infrastructure Fund), வேளாண் சந்தைப் படுத்தல் உள்கட்டமைப்புத் திட்டம் (AMI - Agricultural Marketing Infrastructure Scheme), வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணைத் திட்டம் (SMAM - Sub-Mission on Agricultural Mechanization) மற்றும் உணவு பதப்படுத்தும் சிறு குறு நிறுவனங்களின் மீதான பிரதான் மந்திரி முறைப்படுத்தல் திட்டம் (PMFME - Pradhan Mantri Formalization of Micro Food Processing Enterprises) போன்ற பல்வேறு அரசுத் திட்டங்களை நன்கு ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த மேம்பாடுகள் செயல்படுத்தப் படுகின்றன.
இதன் முன்னோடிக் கட்டத்தின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, இராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா, திரிபுரா, அசாம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 11 PACS சங்கங்களில் இந்தக் கிடங்குகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதுவரையில் உருவாக்கப்பட்டுள்ள மொத்தச் சேமிப்புத் திறன் 9,750 மெட்ரிக் டன்கள் ஆகும்.
மகாராஷ்டிரா, இராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் PACS சங்கங்களின் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளன.