பாஜக தலைமையிலான மத்திய அரசின் கீழ் உள்ள மத்திய சட்ட அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வப் பதிலின்படி, இந்தியாவின் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது, மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பட்டியல் சாதி, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் தமிழ்நாட்டில் தான் மிக அதிகமாக உள்ளது.
நாட்டில் உள்ள மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 14.15% தலித்துகள், 5.12% பழங்குடியினர் மற்றும் 26.64% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நீதிபதிகளாக உள்ளனர்.
நாட்டின் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது, தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இவர்களிடையே பன்முகத் தன்மை அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
உயர் நீதிமன்றங்களுடன் ஒப்பிடும்போது, கீழமை நீதிமன்றங்களில் பிரதிநிதித்துவம் அதிகமாக உள்ளது என்றும் அந்தப் புள்ளி விவரங்கள் காட்டின.
2018 முதல் நியமிக்கப்பட்ட 847 நீதிபதிகளில் 3.89% பேர் மட்டுமே தலித்துகள், 2% பேர் பழங்குடியினர் மற்றும் 12.27% பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர்.
உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களில் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் உள்ளது.
அதே சமயம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பட்டியல் சாதி, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் "பூஜ்ஜியம்" என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.
பெரிய மாநிலங்களில், தமிழ்நாட்டில் இந்த வகைகளைச் சேர்ந்தவர்கள் 97.65% (1,234-ல் 1,205) உள்ளனர் என்ற நிலையில் அவர்களில் பட்டியல் சாதியினர் 20.66% (255), பழங்குடியினர் 1.21% (15) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 75.76% (935) ஆகியோர் உள்ளனர்.
உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்படுபவர்கள் மட்டுமே நியமிக்கப்படும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள், அந்தந்த உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, அந்தந்த மாநில நீதித்துறை சேவையில் நீதித்துறை அதிகாரிகளை நியமனம் மற்றும் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குகின்றன.
மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை இல்லை.