இயங்குதிறன் கொண்ட குற்றவியல் நீதி அமைப்பை (ICJS) நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக மத்திய உள் விவகார அமைச்சகம் (MHA) அறிவித்துள்ளது.
2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (BNSS) மற்றும் பாரதிய சாக்சிய அதினியம் (BSS) ஆகியவற்றின் கீழான அனைத்து விசாரணைகள் மற்றும் வழக்குகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும்.
இயங்குதிறன் கொண்ட குற்றவியல் நீதி அமைப்பு (ICJS) என்பது காவல் துறை, நீதிமன்றங்கள், சிறைகள், வழக்குத் தொடரல் மற்றும் தடயவியல் ஆய்வகங்களை ஒரே அமைப்பில் இணைக்கும் ஒரு தேசிய டிஜிட்டல் தளமாகும்.
இது மத்திய உள்துறை விவகார அமைச்சகத்தின் (MHA) கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் (NCRB) செயல்படுத்தப்பட்டு, தேசிய தகவலியல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டுள்ளது.
ICJS ஆனது "ஒரு தரவு, ஒரு முறைப் பதிவு" என்ற கொள்கையைப் பின்பற்றுவதுடன் இதன் மூலம் வழக்கின் தகவல்களை ஒருமுறை உள்ளீடு செய்து இணைக்கப்பட்ட அனைத்து முகமைகளுக்கிடையேயும் பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ள முடியும்.
காகிதமில்லா மற்றும் டிஜிட்டல் வழக்கு மேலாண்மை மூலம் குற்றவியல் விசாரணைகள் மற்றும் வழக்குகளின் வேகம், வெளிப்படைத் தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.