கி.பி 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனின் வலிமை மிக்க படை கிழக்கு மற்றும் வட இந்தியாவின் பரந்த பகுதிகளைக் கடந்து பயணித்து சென்றது.
இராஜேந்திர சோழனே தலைமை தாங்கி கங்கைச் சமவெளியை நோக்கி சென்றதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
ஆனால் திருவாலங்காடு செப்புத் தகடுகளில் உள்ள கல்வெட்டுகள், மன்னரின் திறம் மிக்க தளபதிகளில் ஒருவர் கங்கை நோக்கிய ராணுவப் படையெடுப்புக்குத் தலைமை தாங்கியதை வெளிப்படுத்துகின்றன.
கோதாவரி நதிக்கரையிலேயே சோழ மன்னர் தங்கியிருந்தார்.
K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் (The Cholas), T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரம் (பிற்காலச் சோழர்களின் வரலாறு) மற்றும் R.D. பானர்ஜியின் வங்காளத்தின் பாலர்கள் போன்ற வரலாற்றுப் படைப்புகள் அதை வெளிப்படுத்துகின்றன.
சோழப் படைகள் கிழக்கு தக்காணத்தில், கடலோர ஒடிசாவில் உள்ள ராஜ்யங்களைத் தோற்கடித்ததையும், இறுதியில் வங்காளத்தில் உள்ள பாலர் வம்சத்துடன் மோதியதையும் இந்தப் படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.
உண்மையான படையெடுப்பு ஆனது தெற்கில் உள்ள சோழர்களின் தலைநகரிலிருந்து அல்லாமல், கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகள் முழுவதும் பரவியிருந்த வெங்கி நாட்டின் வடகிழக்கில் இருந்து தொடங்கியது.
அந்த நேரத்தில் வெங்கி நாடு, சோழர்களுக்கு விசுவாசமான மன்னர்களால் (கிழக்கு சாளுக்கியர்கள் அல்லது வெங்கியின் சாளுக்கியர்கள்) ஆட்சி செய்யப்பட்டது.
சோழர்களுடன் வெங்கிக்கு நெருங்கிய உறவுகள் இருந்ததாலும், அதன் தெற்கே உள்ள அனைத்துப் பகுதிகளும் ஏற்கனவே இராஜேந்திர சோழனின் பேரரசின் கீழ் இருந்ததால், சக்கரக் கோட்டத்தில் அந்தப் படையெடுப்பின் முதல் வெற்றியுடன் அந்தப் படையெடுப்பு வெங்கிக்கு வடக்கே தொடங்கியது.
சக்கரக்கோட்டம் இராஜபுரத்திலிருந்து எட்டு மைல் தொலைவில், இந்திராவதி நதியின் தெற்குக் கரையில் அமைந்துள்ளது.
நவீன காலத்தில், இந்த இடம் சித்திரக்கூடம் (இன்றைய சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பகுதி) என்று அழைக்கப்படுகிறது.
சக்கரக் கோட்டத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சோழப் படை, சிந்தகா குடும்பத்தின் துணிச்சலான ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 'மசுன தேசம்' அல்லது 'மசுனி தேசம்' என்ற பசுமையான பரப்புகளை நோக்கி படையெடுத்தது.
சிந்தகா ஆட்சியாளர்கள் தங்களை நாக வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்.
நீலகண்ட சாஸ்திரி, தமிழ் பிரசாஸ்தி ஒன்றை மேற்கோள் காட்டி, மதுரமண்டலம், நாமனைக்கோணம் மற்றும் பஞ்சப்பள்ளி ஆகிய பகுதிகள் அனைத்தும் 'மசுனி தேசத்தின்' கீழ் வந்ததாக கூறுகிறார்.
மதுரமண்டலம் சோழப் படையால் குறுகிய நேரத்தில் அழிக்கப்பட்டது.
நாமனைக்கோணம் மற்றும் பஞ்சப்பள்ளி ஆகியவையும் இராஜேந்திரனின் தளபதியால் கைப்பற்றப் பட்டன.
அதைத் தொடர்ந்து, சோழத் தளபதி வடகிழக்கே மேலும் படையெடுத்துச் சென்று, ஆதிநகரத்தில் இந்திரரதனை தோற்கடித்து, ஒட்டா (ஒடிசா) பகுதிகளையும் கைப்பற்றினார்.
கோசல இராச்சியத்தைக் கைப்பற்றியதன் மூலம் அவரது படையெடுப்பு மேற்கு நோக்கித் திரும்பியது.
இங்கு குறிப்பிடப்படும் கோசலப் பகுதி மகாகோசலம் என்றும் அழைக்கப்படுவதோடு இது தட்சிண (தெற்கு) கோசலம் என்று குறிப்பிடப் படுகிறது.
மத்திய-கிழக்கு இந்தியாவின் மீது ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டைக் கொண்ட நிலையில் அடுத்த இலக்கு, அதன் கிழக்கே இருந்த தர்மபாலரால் ஆளப்பட்ட தண்டபுக்தி ஆகும்.
தண்டபுக்தி வங்காளத்தில் உள்ள மிட்னாபூர் மாவட்டத்தின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.
எனவே, அது சுவர்ணரேகா நதியின் இரு கரைகளிலும் நீண்டிருக்கலாம்.
அங்கிருந்து, சோழப் படைகள் வங்காளத்தை நோக்கி முன்னேறின.
அங்கு தர்மபாலனைத் தோற்கடித்த பிறகு, இராஜேந்திரனின் படை இரணாசுரனால் ஆளப்பட்ட தட்சிணராதா (தமிழில் தக்கன லாடம்) நோக்கி படையெடுத்தது.
'ராதா' (ரட்டா அல்லது லடா என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது வடக்கே கங்கையால் சூழப்பட்ட வங்காளத்தின் ஒரு பகுதியின் பண்டைய பெயர் ஆகும்.
தட்சிணராதா என்பது வங்காளத்தில் இன்றைய ஹூக்ளி மற்றும் ஹவுரா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியைக் குறிக்கிறது, அதே நேரத்தில் உத்தரராதா (தமிழில் உத்தர லடம்) என்பது முர்ஷிதாபாத் மற்றும் பிர்பும் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் குறிக்கிறது.
தெற்கு வங்காளம் கைப்பற்றவுடன், அவரின் படைத்தளபதி கிழக்கு நோக்கிச் சென்று, கங்கையைக் கடந்து, பின்னர் கோவிந்த சந்திரரால் ஆளப்பட்ட வங்காள தேசத்தை (கிழக்கு வங்காளம்) அடைந்தார்.
கிழக்கு வங்காளத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இராஜேந்திர சோழனின் படை மேற்கு நோக்கித் திரும்பி மஹிபாலனைத் தோற்கடித்தது.
தளபதி கங்கையை அடைந்து, ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, அதை தனது இறையாண்மை கொண்ட மன்னர் இராஜேந்திரனிடம் கொண்டு வந்தார்.
தளபதி மன்னரை இராணுவத்தின் ஓய்வின் போது கோதாவரி நதிக் கரையில் சந்தித்தார்.
கங்கை நீரைக் கொண்டு வருவது ஒருவேளை அப்படையெடுப்பின் நோக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
ஆனால் உண்மையான நோக்கம் சந்தேகத்திற்கு இடமின்றி சோழப் பேரரசின் சக்தியை வெளிப்படுத்துவதும், வட இந்திய ஆட்சியாளர்களுக்கு அதன் வலிமையை நிரூபிப்பதும் ஆகும்.
பின்னர் இராஜேந்திரன் வெற்றிகரமான தனது தளபதியுடன் தனது இராஜ்ஜியத்திற்குத் திரும்பினார்.
பல கல்வெட்டுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது போல அவர் தனது திரும்பும் பயணத்தின் போது, பல கோயில்களுக்குச் சென்று காணிக்கைகளைச் செலுத்தினார்.
அத்தகைய ஒரு கல்வெட்டு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தென்கிழக்கே பத்து மைல் தொலைவில் அமைந்துள்ள திரிலோகியில் (தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற இடத்திற்கு அருகிலுள்ள நவீன திருலோகி) காணப் பட்டது.
திருலோகியில் பொறிக்கப்பட்ட ஒரு துண்டுப் பதிவு, இந்தக் கிராமத்தில் இறைவனின் புனித பாதங்களை மன்னர் வணங்கிய சம்பவத்தை சுவாரஸ்யமான முறையில் குறிப்பிடுகிறது.
அது கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து சுமார் 10 மைல்கள் தொலைவில் உள்ளது.
இந்த இடத்தின் பண்டைய பெயர் திரிய லோகிய மஹாதேவி-சதுர்வேதி மங்கலம் என்று வழங்கப்பட்டது.
சோழத் தலைநகருக்கு கங்கையின் நீரைக் கொண்டு வருவது மட்டுமே இந்தப் பயணத்தின் நோக்கமல்ல.
ஆனால், அவ்வாறு செய்வது என்பது பேரரசுக்கு வெளியே உள்ள பிரதேசங்கள் வழியாக ஒரு சரியான உரிமையை நிறுவிய பிறகு அரசரின் வலுவான படை பலத்தினை வெளிப்படுத்துவதாகும்.
இப்பயணத்தின் முடிவில், இராஜேந்திரன் தனது தலைநகரில் கங்கை நீருடன் சோழ கங்கம் என்ற குளத்தின் வடிவில் 'வெற்றியின் அடையாளமாக ஒரு நீர் நிலை தூணை' (ஜலமயம் ஜெயஸ்தம்பம்) அமைத்தார் என்ற கூற்றிலிருந்து இது தெளிவாகிறது.
சோழ மன்னரின் படையெடுப்பு நாட்டின் அரசியல் பிளவுகளை மாற்றவில்லை, ஆனால் அது ஒரு குடியேற்றக் குழுவின் வடிவத்தில் ஒரு நிரந்தர அடையாளத்தை அங்கு விட்டுச் சென்றது.