வன நிலப்பரப்புகளில் இருவாட்சிப் பறவைகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு தமிழ்நாடு வனத்துறை ஒரு கள ஆய்வை நடத்த உள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு 2025 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி இருவாட்சிப் பறவை இனப்பெருக்கக் காலமான 2026 ஆம் ஆண்டின் மார்ச் அல்லது ஏப்ரல் மாத தொடக்கம் வரையில் தொடரும்.
முதல் கட்டம் ஆனது ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை, மற்றும் களக்காடு–முண்டத்துறை புலிகள் வளங்காப்பகங்கள் மற்றும் கோயம்புத்தூர் வனப் பிரிவின் கீழ் உள்ள காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் எல்லைகளில் மேற்கொள்ளப்படும்.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது வன ஊழியர்கள், உயிரியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்விடங்கள் வழியாக நடந்து சென்று பார்வைகளைப் பதிவு செய்து அவற்றின் எண்ணிக்கை அடர்த்தியை மதிப்பிடுகின்ற எல்லை சார்ந்த நேரடிப் புலனாதல்/லைன் டிரான்செக்ட் முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்.
இதில் மலை இருவாட்சி, மலபார் சாம்பல் இருவாட்சி, இந்திய சாம்பல் இருவாட்சி மற்றும் மலபார் கருப்பு வெள்ளை இருவாட்சி ஆகிய நான்கு இருவாட்சி இனங்கள் ஆவணப் படுத்தப்படும்.
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் (ATR) இந்தியாவின் முதல் சிறப்பு இருவாட்சி வளங்காப்பு மையத்தை நிறுவ உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.