உலகச் சாலைகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் சேர்க்கப்பட்ட போதிலும், 2011 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில் உலகளவில் சாலைப் போக்குவரத்து மரணங்கள் 21 சதவீதம் குறைந்துள்ளன.
இது உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட புதிய தரவுகளின்படி தெரிய வந்து உள்ளது.
இருப்பினும், இந்தியாவை உள்ளடக்கிய WHO தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் சாலை மரணங்களில் 2 சதவீதக் குறைவு மட்டுமே பதிவாகியுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் வங்கதேசம், பூடான், வட கொரியா, இந்தோனேசியா, மாலத் தீவுகள், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளும் அடங்கும்.
WHO ஐரோப்பியப் பிராந்தியம் மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்துள்ளது.
சாலைப் பாதுகாப்பு குறித்த புதிய பொதுச் சபை பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்ட நிலையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.
2021 ஆம் ஆண்டு நிலைகளுடன் ஒப்பிடுகையில், 2030 ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்து மரணங்களையும் கடுமையான காயங்களையும் 50 சதவீதம் குறைக்கும் நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவதை இந்தப் பிரகடனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பிரகடனத்தின் ஒரு முக்கியத் தூணான "பாதுகாப்பான அமைப்பு" அணுகுமுறையானது, மனிதத் தவறுகள் தவிர்க்க முடியாதவை என்பதை அங்கீகரித்து, அதன்மூலம் உயிரிழப்பு விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்காகப் பாதுகாப்பான சாலை வடிவமைப்பு, மேம்பட்ட வாகனங்கள், குறைந்த வேகம் மற்றும் வலுவான ஒழுங்குமுறைகளை வலியுறுத்துகிறது.