உள்துறை அமைச்சகம் மற்றும் வடக்குக் கட்டிட அலுவலகம்
July 31 , 2025 12 hrs 0 min 18 0
ஆங்கிலேயர் காலத்து வடக்குத் தொகுதி அலுவலகத்திலிலிருந்து உள்துறை அமைச்சகம் மாற்றப்பட உள்ளது.
இந்த அமைச்சகம் சுமார் 90 ஆண்டுகளாக இந்த முகவரியால் அறியப் படுகிறது.
டெல்லியின் லுடியன்ஸ் பகுதியில் உள்ள ரைசினா மலைக்குன்றில் உள்ள புகழ்பெற்ற வடக்குத் தொகுதி கட்டிடம் இனி மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) அமைவிடமாக இருக்காது.
புதிய அலுவலக வளாகத்திற்குக் குடிபெயர்ந்த முதல் நபர்களில் மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் ஒருவர் ஆவார்.
இப்புதிய வளாகத்தில் உள்துறைக்கு 347 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது டெல்லி ஜன்பத் பகுதியில் உள்ள பொதுவான மத்தியச் செயலக கட்டிடத்திற்கு (CCS - Common Central Secretariat) மாறுகிறது.
அனைத்து அலுவலகங்களும் வடக்கு மற்றும் தெற்கு அலுவலகத் தொகுதிகளிலிருந்து வெளியேறியதும், இவை ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்படும்.
‘யுகே யுகீன் பாரத் தேசிய அருங்காட்சியகம்’ என்று பெயரிடப்பட்ட இது, சுமார் 25,000-30,000 கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தும்.
இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கும்.
மத்திய விஸ்தா மறு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பொது மத்தியச் செயலக கட்டிடம் இருக்கும்.
மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு இயக்கத்தினை மேம்படுத்துவதே CCS அமைப்பை உருவாக்குவதன் நோக்கமாகும்.
இது உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்பதோடு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள அலுவலகங்களிலிருந்து ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் ஒரு தேவை அற்றப் பயணத்தைத் தவிர்க்கும்.
வடக்கு தொகுதி மற்றும் தெற்குத் தொகுதி உள்ளிட்ட பிரிட்டிஷ் காலக் கட்டிடங்கள் பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவு மற்றும் நிதி அமைச்சகங்கள் போன்ற முக்கிய நிர்வாக கட்டிடங்களைக் கொண்டுள்ளன.
இந்த சிவப்பு மணற்கல்லாலான கட்டிடங்கள் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஹெர்பர்ட் பேக்கரால் கட்டமைக்கப்பட்டு 1921 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டன.