ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது, 'சுவடுகள்' என்ற பெயரில் ஆன ஒரு எண்ணிமக் களஞ்சியத்தினை உருவாக்கும் ஒரு இலட்சிய நோக்கம் மிக்கத் திட்டத்திற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இது தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களின் பாரம்பரிய நிகழ்த்துக் கலைகளை ஆவணப்படுத்திப் பாதுகாக்கும்.
காலப்போக்கில் படிப்படியாக மறைந்து வரும் ஆயிரக்கணக்கான பூர்வீக/உள்நாட்டுக் கலை வடிவங்கள் மற்றும் வாய்மொழி மரபுகளை எண்ணிம முறையில் காப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினச் சமூகங்களால் நிகழ்த்தப்படும் பல கலை வடிவங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன.
இந்த மாநிலம் முழுவதும் சுமார் 560க்கும் மேற்பட்ட கலை வடிவங்கள் இன்னும் இந்தச் சமூகங்களால் நிகழ்த்தப்படுகின்றன.
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சிங்காரி மேளம், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இரதக் காவடி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த கணியன் கூத்து, திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த பெரிய மேளம், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த பெரும் பாறை மற்றும் தருமபுரி பகுதியைச் சேர்ந்த மாலைக் கூத்து ஆகியவை சில குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள் ஆகும்.
பூத கபால ஆட்டம் என்பது தருமபுரி மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட கோயில்களில் மட்டுமே நிகழ்த்தப்படும் ஒரு தனித்துவமான சடங்கு நிகழ்ச்சியாகும்.