ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் அறிக்கை – HDIல் இந்தியா 129வது இடம்
December 12 , 2019 2073 days 874 0
2019 ஆம் ஆண்டின் மனித வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index - HDI) மொத்தமுள்ள 189 நாடுகளில் இந்தியா ஒரு இடம் முன்னேறி 129வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தக் குறியீட்டில் 2018 ஆம் ஆண்டில் இந்தியா 130வது இடத்தில் இருந்தது.
இந்தக் குறியீடானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் (United Nations Development Programme - UNDP) வெளியிடப் பட்டுள்ளது.
இந்தத் தரவரிசையானது வறுமை, கல்வி, வாழ்நாள் கால அளவு மற்றும் சுகாதார நல வசதிகளை அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிடப் பட்டுள்ளது.
இந்தத் தரவரிசையானது "வருமானத்திற்கு மேலே, சராசரிகளுக்கு மேலே, இன்றையத் தினத்திற்கு அப்பால்: 21 ஆம் நூற்றாண்டில் மனித வளர்ச்சியில் ஏற்றத் தாழ்வுகள்" என்ற தலைப்பில் பட்டியலிடப் பட்டுள்ளது.
இந்தத் தரவரிசையில் நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
முக்கியமான அம்சங்கள்
1990 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை குழந்தை பிறப்பின் போது ஆயுட்கால எதிர்பார்ப்பானது 11.6 ஆண்டுகள் அதிகரித்துள்ளது என்பதையும் தனிநபர் வருமானம் 250 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
சமூக உள்ளடக்கல் மற்றும் பாலினச் சார்பு ஆகிய பிரச்சினைகள் பற்றியும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
இந்தியாவில், 2005-06 முதல் 2015-16 வரை 27.1 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர்.
பாலின வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 122வது இடத்தில் உள்ளது.
இருப்பினும், இந்த அறிக்கையின் படி, உலகில் ஏழைகளை அதிகம் கொண்ட நாடு இந்தியா ஆகும். உலகில் உள்ள மொத்த ஏழைகளில் 41% ஏழைகளை இந்தியா கொண்டுள்ளது.
சமத்துவமின்மையைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட HDIல் (IHDI - Inequality-Adjusted HDI), இந்தியாவின் நிலையானது ஒரு நிலை பின்தங்கி 130வது இடத்தில் உள்ளது.
ஏற்றத் தாழ்வுகள் காரணமாக HDIயில் ஏற்படும் சதவீத இழப்பை IHDI குறிக்கின்றது.
பாலினச் சமத்துவமின்மைக் குறியீட்டில் (Gender Inequality Index - GII) இந்தியாவின் மதிப்பு 0.501 ஆகும். 2018 ஆம் ஆண்டின் GII குறியீட்டில் மொத்தமுள்ள 162 நாடுகளில் இந்தியா 122 இடத்தைப் பிடித்துள்ளது.