2025-26 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் இனி அரசு அல்லது தனியார் நடத்தும் எந்தவொரு பள்ளியாகவோ அல்லது கல்லூரியாகவோ இருந்தாலும், சாதிப் பெயர் அடையாளங்களைக் கொண்டிருக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம், திருச்செங்கோடு வட்ட கொங்கு வேளாளர் சங்கம் மற்றும் Poor Educational Fund ஆகிய அமைப்புகள் தாக்கல் செய்த பல்வேறு நீதிப் பேராணை மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டப் பள்ளி நிர்வாகங்கள் சாதி அடையாளங்களைக் கைவிடத் தவறினால், அவற்றின் அங்கீகாரம் திரும்பப் பெறப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகளின் பெயர்களில் இருந்து, ‘கள்ளர் சீரமைப்பு’ மற்றும் ‘ஆதி திராவிடர் நலம்’ போன்ற சொற்களை நீக்கி, ஓய்வு பெற்ற நீதிபதி K.சந்துரு தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தவும் மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சாதி அமைப்பை நிலை நிறுத்தும் சங்கங்கள், அத்தகையச் சங்கங்கள் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக என்று அரசியலமைப்பின் 226வது சரத்தின் கீழ் நீதிப் பேராணை அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளது.
சாதிய அமைப்பானது ஒரு மதத்தோடு மட்டும் நின்று விடாமல் கிட்டத்தட்ட அனைத்து மதங்களிலும் பரவியுள்ளது.