தலைமைக் காவலர் மற்றும் சிறப்புத் துணை ஆய்வாளர்களின் செயல்திறன் மீதான மதிப்பீட்டுப் படிவங்களிலிருந்து சாதி அல்லது சமூகப் பிரிவை நீக்க தமிழ்நாடு ஐந்தாவது காவல் துறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி C.T. செல்வம் தலைமையிலான இந்தக் குழுவானது, தொழில்முறைப் பணிகளை மதிப்பிடுவதற்கு சாதி விவரங்கள் தேவை அற்றவை என்றும், அவை ஒரு சார்பு நிலைக்கு வழி வகுக்கும் என்றும் கூறியது.
இந்திய காவல் பணி அதிகாரிகள் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகளின் வருடாந்திர மறைக் காப்பு அறிக்கைகளில் (ACR) சாதிக் குறிப்பு சேர்க்கப்படவில்லை.
காவல் நிலையங்களில் எந்த சட்ட விதிகளும் அதை அனுமதிக்காத, புகார்தாரர்கள் மற்றும் குற்றம் சாட்டப் பட்டவர்களின் சாதியைப் பதிவு செய்யும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரவும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
கிராமங்களில் தெருக்களிலும் எல்லைக் குறிகளிலும் இருந்து சாதிப் பெயர்களை நீக்க அனைத்துக் கட்சிப் பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு ஆணையம் அரசாங்கத்தை வலியுறுத்தியது.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதிக்கும் சாதி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக சாதி சார்ந்தப் பிரச்சினைகள் அதிகம் எழும் மாவட்டங்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகளை (SIC) அமைக்கவும் அது கோரிக்கை விடுத்தது.