ஜக்தீப் தன்கர் 2025 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதியன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அரசியலமைப்புப் பதவியில் ஓர் அரிய இடைக்காலக் காலியிடத்தை இது உருவாக்கியது.
இந்தியத் தேர்தல் ஆணையம், அவரது ராஜினாமாவை அறிவிக்கும் வகையில் உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பைப் பெற்றுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
அது மாநிலங்களவையின் பொதுச் செயலாளர் P.C. மோடியை தேர்தல் அதிகாரியாக நியமித்தது.
324வது சரத்தின் கீழ், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், 1952 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப் படுகிறது.
மேலும் அதற்கான விதிகள், 1974 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விதிகளின் கீழ் வகுக்கப் பட்டுள்ளன.
இதில் வேட்பு மனுவை முன்மொழிபவர்களாக குறைந்தது 20 வாக்காளர்களும், வழி மொழிபவர்களாக குறைந்தது 20 வாக்காளர்களும் இருக்க வேண்டும்.
இந்த நோக்கத்திற்காக என்று நியமிக்கப்பட்ட எந்த நாளிலும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் அதிகாரியிடம் இது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதனை வேட்பாளரோ அல்லது அவரது முன்மொழிபவர்களோ அல்லது வழி மொழிபவர்களோ தாக்கல் செய்வார்கள்.
இத்தேர்தலுக்கான பாதுகாப்பு வைப்புத்தொகை 15,000 ரூபாய் ஆகும்.
ஒரு மரபின்படி, மக்களவைச் செயலாளர் அல்லது மாநிலங்களவைச் செயலாளர் ஒரு சுழற்சி முறையில் இதன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்கள்.
2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற கடைசி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலின் போது, மக்களவையின் செயலாளர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மக்களவை/மாநிலங்களவைச் செயலகத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் உதவித் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வகையில் மாநிலங்களவை மற்றும் மக்களவையின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கியது.
அவர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கச் சுதந்திரமாக வாக்களிப்பர் என்பதோடு அவர்கள் கட்சியின் கொறடாவினால் கட்டுப்படுத்தப்பட மாட்டார்கள்.
குடியரசுத் துணைத் தலைவர் ஐந்து ஆண்டுகள் பதவி வகிக்கிறார்.
குடியரசுத் துணைத் தலைவர் மாநிலங்களவைத் தலைவராகவும் உள்ளார்.
இது நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியாகும்.
இருப்பினும், அவரது பதவிக் காலம் முடிவடைந்த போதிலும், அவருக்குப் பின் அவரது பதவியினை ஒருவர் பொறுப்பேற்கும் வரை அவர் அப்பதவியில் நீடிப்பார்.
குடியரசுத் துணைத் தலைவரின் மரணம், பதவி நீக்கம் அல்லது இராஜினாமா ஆகிய நிலைமைகளில், புதிய தேர்தலைத் தவிர வேறு எந்த நீட்டிப்பு முறையையும் அதற்கு அரசியலமைப்பு வழங்கவில்லை.
அத்தகையதொருச் சூழ்நிலையில், மாநிலங்களவையின் துணைத் தலைவர் அவை நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கலாம்.
இதனால், குடியரசுத் துணைத் தலைவர் பதவி விலகினால், தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும், ஏனெனில் அந்தப் பதவி காலியாக விடப்பட முடியாது.
அரசியலமைப்பின் 66(1)வது சரத்தின் படி, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் "ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையின்படி நடத்தப் படும், மேலும் அத்தகைய தேர்தலில் வாக்களிப்பு முறை இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படும்."
"ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையின்படி" நடத்தப் படும் தேர்தல், ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு இணையான பல விருப்பத் தேர்வுகள் இருப்பதைக் குறிக்கிறது.
வெற்றி பெறும் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க தேவையான வாக்குகளின் ஒதுக்கீட்டைப் பெற வேண்டும்.
இது செல்லுபடியாகும் வாக்குகளில் மொத்தம் 50% வாக்குகளுடன் கூடுதலாக 1 என்ற எண்ணிக்கையாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த வாக்குகளின் மதிப்பு வேறுபட்டிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலைப் போலல்லாமல் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பில் தான் இருக்கும்.