குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை முன்னேற்ற சட்டத் திருத்தம்
February 12 , 2018 2864 days 1010 0
2006ஆம் ஆண்டின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை முன்னேற்ற சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு முன்பாக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களின் முதலீட்டு செலவின் அடிப்படையில் வகைப்படுத்தி வந்த அரசாங்கம் இனி தொழில் நிறுவனங்களின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் வகைப்படுத்த முக்கியமான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
இச்சட்டத்தின் ஏழாவது பிரிவில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் வணிகம் செய்வதை எளிமையாக்கவும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வகைப்பாட்டு விதிமுறைகளை வளர்ச்சிக்கு ஏதுவாக மாற்றியமைக்கவும், புதிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கு ஏற்றவாறு மறைமுக வரி விதிப்புகளை சீரமைக்கவும் முற்படுகிறது.
நாட்டில் வேளாண்மைத் துறைக்கு அடுத்ததாக அதிக அளவில் மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் துறை MSME (Micro, Small and Medium Enterprises) எனப்படும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஆகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் MSME துறை 31% பங்களிக்கின்றது.