குளிர் கூரை பூச்சுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை
June 7 , 2026 109 days 253 0
2026 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, குளிர் கூரை பூச்சு பயன்பாட்டிற்கான இந்தியாவின் முதல் மாநில அளவிலான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது.
வீடுகள், பள்ளிகள் மற்றும் பொதுக் கட்டடங்களில் குளிர் கூரை பூச்சுகளைப் பயன்படுத்துவதற்கான 12 கட்ட நிலையான கட்டமைப்பை இந்த SOP வழங்குகிறது.
இது நகர்ப்புற வெப்பத்தைக் குறைத்தல், கூரையின் மூலம் வெப்பம் உறிஞ்சப் படுவதைக் குறைத்தல் மற்றும் உட்புற வெப்ப வசதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம் (TNGCC) மற்றும் தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் (TNCCM) ஆகியவற்றால் இந்த SOP உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் SEEDS தொழில்நுட்ப சேவைகள் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
குளிர் கூரை பூச்சுகள் என்பவை கட்டடத்தின் வெப்பநிலையையும் ஆற்றல் நுகர்வையும் குறைப்பதற்காகக் கூரைகளில் பூசப்படும் ஒளிப் பிரதிபலிப்புப் பொருட்களாகும்.