TNPSC Thervupettagam

கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026

August 14 , 2026 5 days 116 0
  • கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026 மக்களவையில் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் உள்ள கேரள மாநிலத்தின் பெயரை "கேரளம்" என்று மாற்றுவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தொடர்பான தீர்மானம் ஒன்று 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கேரளச் சட்ட மன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து, பெயர் மாற்றம் குறித்த சட்டமன்றத்தின் தீர்மானத்தை கேரள அரசு மத்திய அரசுக்கு அனுப்பியது.
  • பின்னர், இந்தியாவின் குடியரசுத் தலைவர், இம்மசோதா குறித்த கருத்துக்களைத் தெரிவிக்குமாறு மாநில சட்டமன்றத்திற்கு அதனை அனுப்பினார்.
  • இக்கோரிக்கை குறித்த குடியரசுத் தலைவரின் பரிந்துரையை கேரள சட்டமன்றம் ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.
  • மசோதாவின் தலைப்பு மற்றும் அதன் விதிகள் உட்பட, அதில் உள்ள 10 பிரிவுகள் குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய அனைத்துக் கேள்விகளையும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
  • கேரள சட்டமன்றத்தின் கருத்தைக் கோரி குடியரசுத் தலைவர் ஒரு பரிந்துரையை அனுப்பியது இதுவே முதல் முறையாகும்.
  • அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் தமது மாநிலத்தின் பெயர் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அச்சட்டமன்றம், அரசியலமைப்பின் 3-வது சரத்தின் கீழ் தனது மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியது.
  • தற்போதைய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கை வெளியிடப் பட்டதும், மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பெயர் 'கேரளா' என்பதிலிருந்து 'கேரளம்' என மாற்றப்படும்.
  • அரசியலமைப்பின் 3-வது சரத்தின்படி, அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் 'கேரளா' என்ற மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என மாற்றியமைக்கப்படும்.

அரசியலமைப்பின் சரத்து 3

  • இந்திய அரசியலமைப்பின் சரத்து 3-இன் படி, நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் எந்தவொரு மாநிலத்தின் பெயரையும் மாற்றலாம்.
  • இந்தப் பிரிவு மேலும் குறிப்பிடுவது என்னவென்றால், இதற்கான மசோதா எதையும் குடியரசுத் தலைவரின் பரிந்துரையின்றி நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் அறிமுகப்படுத்த முடியாது.
  • மேலும், மசோதாவில் உள்ள முன்மொழிவு ஏதேனும் ஒரு மாநிலத்தின் பரப்பளவு, எல்லைகள் அல்லது பெயரைப் பாதிக்கும் பட்சத்தில், அந்த மசோதாவைக் குடியரசுத் தலைவர் சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்திற்கு அனுப்பி, அதன் கருத்துக்களைக் கோர வேண்டும், இதற்கெனக் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள்ளோ அல்லது குடியரசுத் தலைவர் அனுமதிக்கும் கூடுதல் காலத்திற்குள்ளோ மாநிலம் தனது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்; அத்தகைய காலக்கெடு முடிந்திருக்க வேண்டும்.
  • எளிமையாகச் சொன்னால், மாநில சட்டமன்றம் முதலில் பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதை உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) அனுப்புகிறது.
  • பின்னர் அது குடியரசுத் தலைவரின் பரிந்துரையைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படுகிறது.
  • குடியரசுத் தலைவர் பரிந்துரைத்த பின்னரே இத்தகைய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.
  • அடுத்த கட்டமாக, பாதிக்கப்பட்ட மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு அந்த மசோதா அனுப்பப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களின் கருத்துக்கள் பெறப் படுகின்றன.
  • இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், மாநிலத்தின் கருத்து நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தாது என்பதோடு மாநிலம் உடன்படாத நிலையிலும் நாடாளுமன்றம் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
  • பின்னர் அந்த மசோதா மக்களவை (கீழ் அவை) அல்லது மாநிலங்களவை (மேல் அவை) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டு, எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்; அதாவது, அவையில் உள்ள உறுப்பினர்களில் 50%-க்கும் அதிகமானோர் வருகை தந்து வாக்களிக்க வேண்டும்.
  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, மசோதா இறுதி ஒப்புதலுக்காகக் குடியரசுத் தலைவரிடம் செல்கிறது.
  • அவர் கையெழுத்திட்டதும் அது சட்டமாகிறது; மேலும் அரசியலமைப்பின் முதல் மற்றும் நான்காவது அட்டவணைகளில் அந்தப் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றப்படுகிறது.
  • ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதை விட, நாட்டின் பெயரை மாற்றும் செயல்முறை மிகவும் சிக்கலானது.
  • சரத்து 3 மாநிலங்களின் பெயரை மாற்றுவது பற்றி மட்டுமே குறிப்பிடுவதால், இந்தியாவின் பெயரை மாற்ற சரத்து 368-இன் கீழ் முறையான அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும்.
  • நாட்டை "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்..." என்று வரையறுக்கும் அரசியலமைப்பின் சரத்து 1-லும் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
  • நாட்டிற்கு ஒரே ஒரு பெயரை மட்டும் பயன்படுத்தும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் அந்தத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரின் ஆதரவும் தேவைப்படுகிறது.
  • இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்றுவதற்கான கோரிக்கைகளை இந்திய உச்ச நீதிமன்றம் இருமுறை (2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில்) நிராகரித்துள்ளது.
  • அவ்விரு பெயர்களும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமானவை என்றும், அரசியலமைப்புச் சட்டம் 'பாரத்' மற்றும் 'இந்தியா' ஆகிய இரு பெயர்களையும் குறிப்பிடுவதால் அவற்றை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தலாம் என்றும் அது சுட்டிக் காட்டியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்