தமிழ்நாடு அரசானது, கேரள மாநிலத்தின் ஆலப்புழாவில் உள்ள ஆறுக்குட்டியில் பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களின் நினைவிடத்தைக் கட்டமைக்க உள்ளது.
இதற்கான அடிக்கல் ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதியன்று நாட்டப் படும்.
இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு 4 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
1924 ஆம் ஆண்டு வைக்கம் சத்தியாகிரகத்தின் போது பெரியார் ஈ.வெ. இராமசாமி ஆறுக்குட்டியில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் 1924 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு, அப்போதைய திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்த ஆறூக்குட்டி சிறையில் ஒரு மாதம் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
பழைய சிறைச்சாலையின் சேதமடைந்தப் பகுதிகள் இன்னும் அந்த முன்மொழியப் பட்ட நினைவுச் சின்னப் பகுதியில் உள்ளன.
வைக்கம் சத்தியாகிரகம் ஆனது சாதி அடிப்படையிலான கட்டுப்பாடுகளை எதிர்த்து 1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1925 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நடைபெற்றது.
வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோயிலில் அனைத்து சாதியினரும் நுழைய வேண்டும் என்பதில் இந்த இயக்கம் கவனம் செலுத்தியது.
ஆரம்பத்தில் இது T.K. மாதவன், K.P. கேசவ மேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது.
இந்த இயக்கத்தின் காலப் போக்கில் M.K. காந்தி இந்த இயக்கத்தை ஆதரித்தார்.
பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியன்று பெரியார் இந்தப் போராட்டத்தில் இணைந்தார்.
அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை நிலை நிறுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
1924 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் விடுவிக்கப்பட்ட பிறகு, ஜூலை மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டு அவருக்கு நான்கு மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
அவர் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1936 ஆம் ஆண்டு கோயில் நுழைவுப் பிரகடனத்திற்கு சத்தியாக்கிரகம் ஒரு முக்கிய முன்னோடித் திட்டமாக அமைந்தது.