2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதியன்று 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, 4:1 என்ற விகிதத்தில், எல்லா வயதுடைய பெண்களுக்கும் தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு எல்லா இடங்களிலும் வழிபடுவதற்கான அவர்களது உரிமையை உறுதி செய்துள்ளது.
நீதிபதி D.Y. சந்திரசூட் எந்த ஒரு சடங்குகளோ அல்லது மரபுகளோ அடிப்படை உரிமைகளோடு முரண்படும்போது அவை களையப்பட வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இத்தீர்ப்பு 2006 ஆம் ஆண்டு லாப நோக்கற்ற அமைப்பான இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கின் மீதான தீர்ப்பாகும்.
இத்தீர்ப்பு 1951ம் ஆண்டில் பம்பாய் மாநிலம் எதிர் (Vs) நரசு அப்பா மாலி என்ற புகழ்பெற்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு முரண்பட்டதாக உள்ளது.
10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கும் கேரள கோவில் நுழைவு அனுமதிச் சட்டத்தின் 3(B) விதியானது வழிபாட்டிற்கான இந்து சமய சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பின்வருமாறு கூறியுள்ளது.
பெண்களுக்கு அனுமதி மறுக்கும் இந்த விதியானது ஷரத்து 25 என்ற அரசியலமைப்பின் விதியை மீறுவதாகும். மேலும் இது தீண்டாமையின் ஒரு வடிவமாகும்.
பெண்களுக்கு எதிரான பாகுபாடு பெண்களின் சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கு எதிரான உரிமையை மீறுவதாகும்.
மாதவிடாய் போன்ற உடலியல் ரீதியான காரணங்களின் படி அவர்களுக்கு அனுமதி மறுத்தல் அரசியலமைப்பிற்கு விரோதமானதாகும்.
வழிபடும் உரிமை என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் சமமாக கிடைப்பதாகும். அது பாலின பாகுபாட்டோடு இருக்கக்கூடாது.