சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலக் காடுகள்
March 13 , 2019 2309 days 813 0
ராம்சார் சாசனத்தின் “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலக் காடுகள்” என்ற தகுதியை இந்திய சுந்தரவனக் காடுகள் பெற்றுள்ளது.
இந்த சுந்தரவனக் காடுகளானது இந்தியாவின் 27-வது ராம்சார் சாசன இடமாக உருவெடுத்துள்ளது.
சுந்தரவனக் காடுகளானது இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா கழிமுகத்தின் சிற்றோடைகள், நீரோடைகள், நதிகளின் அமைப்புகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ளது.
இந்திய சுந்தரவனக் காடுகளானது ஏற்கெனவே யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் உள்ளது. மேலும் இது வங்காளப் புலிகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது.
சுந்தரவனக் காடுகளின் இடத்திற்குள் சுந்தரவன புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. மேலும் தேசியச் சட்டத்தின் கீழ் இதன் ஒரு பகுதி “முக்கிய புலிகள் வாழிடமாக” அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த “புலிகள் காப்பக நிலத்தோற்றமாக” கருதப்படுகிறது.
ராம்சார் சாசனம்
ராம்சார் சாசனம் 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது சதுப்புநிலக் காடுகள், அதன் வளங்களின் பயன்பாடுகள் மற்றும் அதன் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒத்துழைப்புக்காக கட்டமைப்புகளை அளிக்கக் கூடிய அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு ஒப்பந்தமாகும்.
இந்த சாசனமானது 1975 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.