TNPSC Thervupettagam

சிசுபால் வழக்கு தீர்ப்பு 2026

June 19 , 2026 15 hrs 0 min 54 0
  • சிசுபால் @ சிஷ் ராம் எதிர் சுர்ஜீத் (2026) வழக்கில், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகளில் இல்லத்தரசிகள் செய்யும் ஊதியமில்லா வீட்டு வேலைகளுக்கான சுயாதீனமான பொருளாதார மதிப்பை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
  • இல்லத்தரசிகள் செய்யும் வீட்டு வேலைகள் முறையான பண வருமானத்தை ஈட்டவில்லை என்பதற்காக மட்டுமே அதற்குப் பொருளாதார மதிப்பு இல்லை என்று கருதக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • மோட்டார் வாகன விபத்து மரண வழக்குகளில் இழப்பீட்டைத் தீர்மானிக்கும் போது, இல்லத்தரசிகளுக்கான குறைந்தபட்ச கற்பனை வருமானமாக மாதம் ₹30,000 ஆக நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
  • இல்லத்தரசி இறக்க நேரிடும் வழக்குகளில் இழப்பீடு வழங்க "வீட்டுப் பராமரிப்பு இழப்பு" என்ற தனிப் பிரிவை நீதிமன்றம் உருவாக்கியது.
  • இதுபோன்ற வழக்குகளில், தீர்ப்பாயங்களும் நீதிமன்றங்களும் "வீட்டுப் பராமரிப்பு இழப்பு" என்ற பிரிவின் கீழ் கூடுதலாக மாதம் ₹30,000 வழங்க வேண்டும்.
  • இழப்பீடானது மிகவும் குறைவாக கணக்கிடப்படும் கற்பனை வருமானத்தின் அடிப்படையில் அமையும் போது இல்லத்தரசிகள் எதிர்கொள்ளும் பாதகமான நிலையைச் சரி செய்வதற்கான குறைந்தபட்ச அளவுகோல் இந்த ₹30,000 என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
  • குடும்பத்திற்கு நேரடியாகப் பணப் பங்களிப்பைச் செய்யாத இல்லத்தரசிகளுக்கான "மாற்று" மாத வருமானம் என இத்தொகையை நீதிமன்றம் விவரித்துள்ளது.
  • ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் இந்தத் தொகை 10% என்ற ஒட்டுமொத்த அடிப்படையில் உயர்த்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இல்லத்தரசி வேலைக்குச் செல்பவராகவும், நிரூபிக்கப்பட்ட வருமானத்தைக் கொண்டவராகவும் இருந்தால், "வீட்டுப் பராமரிப்பு இழப்பு" என்பதன் கீழான இழப்பீடு நிரூபிக்கப்பட்ட வருமானத்துடன் கூடுதலாக வழங்கப்படும்.
  • குடும்பங்களை ஆதரிப்பதாலும், நாட்டின் மனித மூலதன மேம்பாட்டிற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதாலும் இல்லத்தரசிகளை "தேசத்தை உருவாக்குபவர்கள்" என இத்தீர்ப்பு விவரிக்கிறது.
  • சமைத்தல், சுத்தம் செய்தல், கவனித்துக்கொள்ளுதல் மற்றும் குழந்தைகளை வளர்த்தல் போன்ற அன்றாட வீட்டுச் செயல்பாடுகள், ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதோடு பொருளாதார உற்பத்தித் திறனையும் சாத்தியமாக்குகிறது என நீதிமன்றம் கவனித்தது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) போன்ற வழக்கமான பொருளாதாரக் குறியீடுகளில் இந்தப் பங்களிப்புகள் பொதுவாகப் பிரதிபலிப்பதில்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
  • இல்லத்தரசிகள் இந்தியாவின் "மனித மூலதனத்தின்" சிற்பிகள் என்றும், தொழில் வல்லுநர்கள் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் வெற்றிக்கு அடித்தளமிடுகிறார்கள் என்றும் அமர்வு கூறியது.
  • இல்லத்தரசிகள் செய்யும் பொருளாதார, சமூக மற்றும் தேசத்தை உருவாக்கும் பங்களிப்புகளைக் கண்டிப்பான எண்கணிதக் கணக்கீடுகளால் முழுமையாக அளவிட முடியாது என்பதை இத்தீர்ப்பு ஏற்றுக்கொண்டது.
  • ₹30,000 என்ற தொகையை நிர்ணயிக்க எந்தவொரு குறிப்பிட்ட கணித அல்லது அனுபவபூர்வமான அடிப்படையையும் இத்தீர்ப்பு வழங்கவில்லை.
  • மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரிக்கைகள் பல ஆண்டுகளாக வழக்குகளில் சிக்கித் தவிப்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிவாரணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் நீதிமன்றம் கவனித்தது.
  • மோட்டார் வாகன விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயங்களில் (MACTs) இதுபோன்ற வழக்குகளின் சராசரி நிலுவைக் காலம் சுமார் ஆறு ஆண்டுகள் என்றும், உயர் நீதிமன்றங்களில் எட்டு ஆண்டுகள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
  • இழப்பீட்டு மேல்முறையீடுகள் உயர் நீதிமன்றங்களில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • உண்மையான காரணங்களுக்காக மட்டுமே வாய்தாக்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.
  • நீண்டகால தாமதங்கள் 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் நலன் சார்ந்த நோக்கத்தையே தோற்கடிக்கின்றன என நீதிமன்றம் கருதியது.
  • பழைய மோட்டார் விபத்து இழப்பீட்டு மேல்முறையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறும், வழக்குகளை விரைவாக முடித்துவைப்பதை உறுதி செய்யக் கூடுதல் அமர்வுகளின் அவசியத்தை மதிப்பிடுமாறும் அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்