1945 ஆம் ஆண்டு மருந்துகள் விதிகளின் 'அட்டவணை K' என்பதிலிருந்து “சிரப்” என்ற வார்த்தையை நீக்கியதன் மூலம், இருமல் மருந்துகள் உட்பட அனைத்து மருத்துவ சிரப்களையும் வாங்குவதற்கு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை மத்திய சுகாதார அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.
எத்திலீன் கிளைகோல் (EG) மற்றும் டைதிலீன் கிளைகோல் (DEG) ஆகியவற்றுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் மாசுபட்டதன் காரணமாக 2022 ஆம் ஆண்டு முதல் பல நாடுகளில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மருந்துச்சீட்டுகளின்றி கடைகளில் விற்கப்படும் பல இருமல் மருந்துகளில், மூச்சுக் குழாய் விரிவூக்கிகள், ஒவ்வாமைத் தடுப்பான்கள் மற்றும் மூக்கடைப்பு நீக்கிகள் ஆகியவற்றின் கலவை உள்ளதுடன் இவை, குறிப்பாகக் குழந்தைகளிடம், தீங்கு விளைவிக்கக் கூடும்.
இந்த மாசுபடுதல் சம்பவங்கள், நுகர்வோர் அணுகல் தொடர்பான பிரச்சனைகளை விட, உற்பத்தியில் தரக் கட்டுப்பாடு, மூலப்பொருள் சோதனை மற்றும் ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆகியவற்றின் தோல்விகளை எடுத்துக்காட்டுகின்றன.
இந்தியாவில் சுமார் மூன்று டஜன் மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள் உள்ளனர், ஆனால் ஆய்வாளர்களின் பற்றாக்குறை மற்றும் போதிய ஒழுங்குமுறை திறன் இல்லாததால் அமலாக்கம் பலவீனமாக உள்ளது.