சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைத் திரும்பப் பெறல் – டாக்டர் மன்மோகன் சிங்
August 27 , 2019 2183 days 585 0
இந்திய அரசானது முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங்கின் சிறப்புப் பாதுகாப்புப் படைப் (Special Protection Group - SPG) பாதுகாப்பைத் திரும்பப் பெற முடிவு செய்திருக்கின்றது.
ஆனால் அவர் மத்திய ரிசர்வ் காவல் படையினால் அளிக்கப்படும் உயரிய பாதுகாப்புப் பிரிவான இசட் ப்ளஸ் பாதுகாப்பை வழக்கம் போல் கொண்டிருப்பார்.
SPG ஆனது பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவருடைய வாரிசுகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் பணியை ஆற்றவிருக்கின்றது.
இதுபற்றி
SPG என்பது பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான மத்திய அரசின் ஒரு ஆயுதப் படையாகும்.
இது இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்பு 1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
பின்னர் இது சிறப்புப் பாதுகாப்புப் படைச் சட்டம், 1988-ன் கீழ் ஒரு சட்டப் பூர்வ அமைப்பாக உருவெடுத்தது.
தொடக்க காலத்தில் SPG ஆனது பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு அளித்தது.
ராஜிவ் காந்தியின் படுகொலைக்குப் பின்பு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 1991 ஆம் ஆண்டில் இச்சட்டம் திருத்தப்பட்டது.