சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள் மூலமான வருவாய்
October 21 , 2025 15 days 51 0
சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையிலிருந்து வருவாய் ஈட்டுவதில் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
மொத்த விற்பனை வருவாயில் அதிக மதிப்பை ஈட்டியதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.
இலாபகரமான சிறைச்சாலை தயாரிப்பு வணிகத்தில் தமிழ்நாடு நாட்டில் முன்னணியில் இருந்தாலும், தெலுங்கானா மற்றும் கேரளா ஆகியவை 2023 ஆம் ஆண்டில் முறையே 55.71 கோடி ரூபாய் மற்றும் 24.44 கோடி ரூபாயுடன் முன்னணியில் இருந்தன.
தேசியக் குற்றப் பதிவு வாரியத்தின் தரவுகளின் படி, ஒரு கைதியினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு தெலுங்கானாவில் அதிகபட்சமாக 95,187 ரூபாயாகவும், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (33,984 ரூபாய்) மற்றும் சண்டிகர் (32,325 ரூபாய்) ஆகவும் உள்ளன.
தயாரிப்பு செயல்பாடுகளில் ஈடுபடும் கைதிகளுக்கு அவர்களின் திறன்களின் அடிப்படையில் இயல்பான ஊதியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு திறமையான தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் மற்றும் பகுதியளவு திறம் வாய்ந்த தொழிலாளர்களுக்கு 270 ரூபாய் வழங்குகிறது.
மாநில அரசின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, சிறைத் துறையில் ஜவுளி, தோல், அலுமினியம், மெழுகு மற்றும் காகிதப் பொருட்களைத் தயாரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன.
எட்டு மத்திய சிறைச்சாலைகள், ஒரு பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலை மற்றும் ஒரு சீர்திருத்தப் பள்ளி ஆகியவற்றில் இந்த வசதி நிறுவப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் பெரும்பாலான பொருட்கள் அரசுத் துறைகளால் வாங்கப்பட்டாலும், சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை அனைத்து மத்திய சிறை வளாகங்களிலும் 'சிறைச்சாலை கடை/பஜார்களை' அமைத்து, பொது மக்களுக்கு சிறைகளில் தயாரிக்கப்படும் பொருட்களை மிகவும் குறைந்த விலையில் விற்கிறது.
ஆயத்த ஆடைகள், தோல் பொருட்களால் ஆன காலணிகள், மழைக் கவச உடைகள், அடுமனை/பேக்கரிப் பொருட்கள் மற்றும் சோப்புகள் போன்ற பொருட்கள் 'Freedom' என்ற தயாரிப்பு பெயரில் விற்கப்படுகின்றன.
இலாபத்தில் 20% என்பது தயாரிப்பை உருவாக்க உழைத்த கைதியின் கணக்கில் வரவு வைக்கப் படுகிறது.
மீண்டும் மீண்டும் குற்றம் புரிவதைக் குறைப்பதற்கும், முதல் முறை குற்றவாளிகளை (18-24 வயதுடையவர்கள்) சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்க உதவுவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆளுமை மனப்பான்மை மாற்ற சிகிச்சை உதவி மேலாண்மை (PATTAM) திட்டம் எதிர்ப்பார்க்கப்பட்ட பலன்களை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பட்டங்கள்/பட்டயப் படிப்புகளைப் பெறவும், அரசு செலவில் தேர்வுகளை எழுதவும் சிறைவாசிகள் அனுமதிக்கப் படுகிறார்கள்.
சிறைச்சாலைகளில் காணொளி வழிக் கலந்தாய்வுகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
நாட்டில் உள்ள 1,332 சிறைகளுள், 1,156 சிறைகளில் இந்த வசதி செய்யப் பட்டுள்ளது.
இம்மாநிலத்தில் உள்ள 126 சிறைகளில் காணொளி வழி கலந்தாய்வு வசதி உள்ளது, அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (123), இராஜஸ்தான் (92), ஒடிசா (84) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (80) ஆகியவை உள்ளன.