ஜப்பானுக்கு மேற்கொள்ளப்படும் அருமண் தனிம ஏற்றுமதி தொடர்பான 13 ஆண்டு கால ஒப்பந்தத்தினை நிறுத்தி வைக்குமாறு IREL (Indian Rare Earths Limited) எனும் அரசுக்குச் சொந்தமானச் சுரங்க நிறுவனத்தினை இந்திய அரசு கோரியுள்ளது.
குறிப்பாக மின்சார வாகன மோட்டார்களுக்கான காந்தங்களில் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியப் பொருளான நியோடைமியத்தின் ஏற்றுமதியை நிறுத்துமாறு, IREL நிறுவனத்திடம் அரசாங்கம் கோரியுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஒரு அரசாங்க ஒப்பந்தத்தின் கீழ், IREL ஆனது டொயோட்சு ரேர் எர்த் இந்தியா என்ற நிறுவனத்திற்கு அருமண் தனிமங்களை வழங்குகிறது.
சீன நாடானது, ஏப்ரல் மாதம் முதல் அதன் அருமண் பொருட்களின் ஏற்றுமதியைக் குறைத்து, அதனால் உலகளவில் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் உயர்தொழில் நுட்ப உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி அளித்துள்ளது.
இந்தியா 6.9 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்ற ஒரு அளவில் உலகின் ஐந்தாவது பெரிய அருமண் இருப்புக்களை கொண்டுள்ளது.
ஆனால் உள்நாட்டில் காந்த உற்பத்தி மேற்கொள்ளப் படுவதில்லை.
இந்தியா இறக்குமதி செய்யப்பட்ட, முக்கியமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட காந்தங்களையே சார்ந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில், இந்தியா 53,748 மெட்ரிக் டன் அருமண் காந்தங்களை இறக்குமதி செய்தது.
இந்த IREL நிறுவனமானது, கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் ஓர் அருமண் மீதான அகழ்ந்தெடுப்பு ஆலையையும், தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் சுத்திகரிப்புப் பிரிவையும் கொண்டுள்ளது.