2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
டிரம்ப் பின்னர் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தையும் தாஜ்மஹாலையும் பார்வையிட்டார்.
பார்வையாளர்களின் புத்தகத்தில் மகாத்மா காந்தி பற்றி அவர் எதுவும் குறிப்பிட வில்லை.
பின்னர் முக்கியத் தலைவர்கள் இருவரும் இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள மொடேரா மைதானம் அல்லது சர்தார் படேல் மைதானத்தில் கூடியிருந்த ஒரு பெரிய கூட்டத்தில் உரையாற்றினர்.
2020 ஆம் ஆண்டு நிலவரப் படி, இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகத் திகழ்கின்றது.
இந்த நிகழ்வை “நமஸ்தே டிரம்ப்” என்று பெயரிட்டு அமெரிக்க அதிபரின் வருகையை இந்தியா கொண்டாடியது.
இந்தியாவும் அமெரிக்காவும் வானூர்திகளுக்கான இரண்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கின்றன.
இந்தியக் கடற்படைக்காக சுமார் 24 எம்ஹெச் - 60 ஆர் வானூர்திகள் தொடர்பான ஒப்பந்தமும் அப்பாச்சி வானூர்திகளுக்காக ஆறு ஏஎச் - 64 இ வானூர்திகள் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட உள்ளன.
இந்தியாவுக்குப் பயணம் செய்த ஏழாவது அமெரிக்க அதிபராகவும் அகமதாபாத்தில் தரையிறங்கிய முதலாவது அமெரிக்க அதிபராகவும் டொனால்டு டிரம்ப் உருவெடுத்து உள்ளார்.
தனது முதலாவது பதவிக் காலத்தில் இந்தியாவிற்கு பயணம் செய்த இரண்டாவது அமெரிக்க அதிபர் இவர் மட்டுமே ஆவார்.
இதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா தனது முதலாவது பதவிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
டுவைட் டி ஐசன்ஹோவர் 1959 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குப் பயணம் செய்த முதலாவது அமெரிக்க அதிபர் ஆவார்.
ரிச்சர்ட் நிக்சன் 1969 ஆம் ஆண்டிலும் ஜிம்மி கார்ட்டர் 1978 ஆம் ஆண்டிலும் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.
பில் கிளிண்டன் 2000 ஆம் ஆண்டிலும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2006 ஆம் ஆண்டிலும் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.
ஒபாமா 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.