தமிழ்நாடு சட்டமன்றமானது 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகங்கள் (திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
தற்போதுள்ள தனியார் அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளை 'ஏற்கனவே உள்ள கல்லூரிகளை (பிரவுன்ஃபீல்ட்) பல்கலைக்கழகங்கள்' என்ற புதிய நிறுவனமாக மாற்ற இது அனுமதிக்கும்.
அத்தகைய வசதியை நிறுவுவதற்கு அருகிலுள்ள நிலத்திற்கான குறைந்தபட்சத் தேவையை மாற்றுவதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 4 ஆம் பிரிவு ஆனது, மாநிலத்தில் தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவ குறைந்தபட்சம் 100 ஏக்கர் அளவிலான தொடர்ச்சியான நிலம் தேவை என்று குறிப்பிடுகிறது.
2025 ஆம் ஆண்டு திருத்தம் ஆனது, பிரவுன் ஃபீல்ட் பல்கலைக்கழகங்களுக்கான குறைந்த பட்ச நில அளவை நகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கராகவும், நகராட்சி மன்றம் அல்லது பேரூராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கராகவும், பிற பகுதிகளில் 50 ஏக்கராகவும் குறைத்துள்ளது.
சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பல்கலைக்கழகங்களிலும் மருத்துவம், பல் மருத்துவம், அதனுடன் தொடர்புடைய சுகாதாரம் மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளில் 65 சதவீத இடங்களை அரசு இடங்களாக ஒதுக்கும் புதிய பிரிவும் சேர்க்கப் பட்டது.
சிறுபான்மை தனியார் பல்கலைக்கழகங்களுக்குப் பாதி இடங்கள் அரசு இடங்களாக ஒதுக்கப்படும்.
உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட்டால், அவை உதவி பெறும் அந்தஸ்தை இழந்து, அரசு மானியம் பெறுவது நிறுத்தப் படும்.