ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 06 ஆம் தேதியானது காவல்துறையினருக்கான ஒரு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மக்களுக்கு அவர்கள் ஆற்றும் சேவைகளையும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அவர்களின் பங்களிப்பையும் கௌரவிப்பதே இதன் நோக்கமாகும்.
சென்னைப் பெருநகர காவல்துறையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு, போதைப் பொருள் எதிர்ப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் சமூக ஊடகப் புலனாய்வுப் பிரிவு ஆகிய மூன்று புதிய பிரிவுகள் உருவாக்கப்பட உள்ளது.
வழக்கமான இணைய தேடுதல் தளம் சாராத ‘டார்க் வெப்’ எனும் தளத்தின் முக்கியச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக என்று காவல் தலைமையகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பை நன்கு உறுதி செய்வதற்காக சென்னையைத் தவிர, மாநகர காவல் ஆணையரகங்களுக்கான கூடுதல் படையாக 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
உறுதியான தொழில் முறை முன்னேற்றத்திற்கான புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
இனி புதிய பதவி உயர்வுத் திட்டத்தில், ஒரு இரண்டாம் நிலை (கிரேடு-II) காவலர் 10 ஆண்டுகளில் முதல் நிலை காவலராகவும் (கிரேடு-1), அதன் பின்னர் தற்போதுள்ள 5 ஆண்டுகளுக்குப் பதிலாக இனி 3 ஆண்டுகளில் தலைமைக் காவலர் பதவிக்கும் பதவி உயர்த்தப் படுவார்.
10 ஆண்டுகள் தலைமைக் காவலராகப் பணியாற்றிய பிறகு அவர் சிறப்புக் காவல் துணை ஆய்வாளராகப் பதவி உயர்வு பெறுவார்.
காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வகையிலான 'மகிழ்ச்சி' எனப்படுகின்ற காவல்நலத் திட்டமானது இனிமேல் மேற்கு மண்டலத்திற்கும் விரிவுபடுத்தப்படும்.