தமிழக மாநில அரசானது, மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்யும் வகையில் அதன் விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறை விதிகளில் சில துணை விதிகள் அறிமுகப்படுத்தப் பட்டன.
சிறைச் சாலைக்குள் உள்ள கழிவுநீர் அல்லது மலமக்கல் தொட்டியினைக் கையினால் சுத்தம் செய்தல் அல்லது அபாயகரமான முறையில் சுத்தம் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது.
இது 2013 ஆம் ஆண்டு கழிவுகளை வெறும் கைகளால் அள்ளும் பணியில் மக்கள் பணியமர்த்தப்படுவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய துணை விதியின்படி, ஒரு கைதியை சிறைச்சாலைக்குள் அனுமதிக்கும் நேரத்தில், சிறை அதிகாரிகள் அந்தக் கைதியின் சாதி பற்றிய எந்த விவரங்களையும் விசாரிக்கவோ அல்லது பெறவோ, பதிவு செய்யவோ கூடாது.
எந்தவொரு பதிவேட்டிலோ அல்லது பதிவிலோ கைதியின் சாதி தொடர்பான எந்த விதியோ அல்லது பத்தியோ பேணப்படக் கூடாது.
சிறைச் சாலைகளில் சாதி அடிப்படையில் எந்தப் பணி / பணிகளிலும் ஈடுபடுத்தப் படக் கூடாது என்பதோடு பணி ஒதுக்கீட்டில் கைதிகளுக்கு எந்தப் பாகுபாடும் இல்லை என்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.