TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகள்

February 3 , 2026 14 days 148 0
  • தொல்லியல் ஆய்வுகள் தமிழ்நாட்டின் செழுமையான மற்றும் பன்முக மரபை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் நிலை நிறுத்தியுள்ளன.
  • இது இந்தியவியலாளரும், "தமிழ்: ஒரு சுயசரிதை" என்ற நூலின் ஆசிரியருமான டேவிட் ஷுல்மானின் வாதத்துடன் ஒத்துப் போகிறது.
  • கீழடியில் கண்டெடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள், அங்கு ஒரு காலத்தில் நகர்ப்புற மற்றும் தொழில்துறை நாகரிகம் செழித்து வளர்ந்ததைக் காட்டுகின்றன.
  • அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கலைப்பொருட்களின் கார்பன் காலக் கணிப்பு, அவை கிமு 6 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 1 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை என்று குறிப்பிடுகிறது.
  • இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் சங்க காலப் பண்புகளையும், செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளன.
  • இங்கு படுகை அடுக்குகளில் இருந்து பெறப்பட்ட முடுக்கி நிறை நிறமாலையியல் (AMS) காலக்கணிப்புகள், கீழடியின் மக்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர் என்றும், வைகை ஆற்றங்கரையில் ஒரு நகர்ப்புற நாகரிகத்தில் வாழ்ந்தனர் என்றும் காட்டுகின்றன.
  • தமிழ்நாடு அரசும சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகையில் கீழடியில் ஒரு திறந்தவெளி தொல்லியல் தள அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது.
  • இந்த அருங்காட்சியகத்தில் வைகை மற்றும் கீழடி; வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை; மட்பாண்டத் தொழில்கள்; நெசவு மற்றும் மணிகள்; கடல் வர்த்தகம்; மற்றும் வாழ்க்கை முறை ஆகிய ஆறு கருப்பொருள் பிரிவுகளில், தகவல் பலகைகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட தொல்லியல் கலைப் பொருட்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட காட்சிக்கூடங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்த அருங்காட்சியகத்தில் வைகை ஆற்றுப் படுகையில் சங்க கால நகர்ப்புறக் குடியிருப்பின் கட்டமைப்பு எச்சங்களும் கலாச்சார அடுக்குகளும் உள்ளன.
  • அகழ்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களில் வரிசையாக அமைக்கப்பட்ட சுட்ட செங்கல் சுவர்கள், சாயமிடும் தொட்டிகளாக அடையாளம் காணப்பட்ட செவ்வக செங்கல் தொட்டிகள், சுடுமண் குழாய்கள் மற்றும் செங்கற்களால் செய்யப்பட்ட மூடப்பட்ட வடிகால் அமைப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காகப் பயன்படுத்தப்பட்ட சுடுமண் வளையக் கிணறுகள் ஆகியவை அடங்கும்.
  • பொருநை அருங்காட்சியகம் சிவகளை, கொற்கை மற்றும் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகளில் இருந்து பெறப்பட்ட கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்துகிறது.
  • இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ளது.
  • இது கப்பல் சிதைவுப் பொருட்கள், ஈயக் கட்டிகள் மற்றும் ரோமானிய மட்பாண்டங்கள் உள்ளிட்ட நீருக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் காட்சிப்படுத்துகிறது என்பதோடு இது ரோம், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடனான பண்டைய வர்த்தகத் தொடர்புகளைச் சுட்டிக்காட்டுகிறது.
  • அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருங்காட்சியகம், பேரரச சோழ வம்சத்தின் வரலாற்று மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் காட்சிப்படுத்தவும் உருவாக்கப்பட்டு வருகிறது.
  • இது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமான பிரகதீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
  • கங்கைகொண்ட சோழபுரம் என்பது ராஜேந்திர சோழனால் வடதிசை வெற்றியைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட ஒரு நகரமாகும்.
  • அதன் கருப்பொருள் முதலாம் ராஜேந்திர சோழனின் பேரரசுப் பாரம்பரியம், கடல்வழி வர்த்தகம் மற்றும் இராஜதந்திரம் என்பதாகும்.
  • இது மாளிகைமேட்டில் உள்ள அரச அரண்மனையின் செங்கல் எச்சங்கள், போர்க் கோப்பைகள், கல் சிற்பங்கள், கல்வெட்டுகள், கட்டிடக்கலைப் பகுதிகள் மற்றும் அப்பகுதியின் தொல்பொருள் கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தும்.
  • தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • இது சோழ வம்சத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும்.
  • இந்த அருங்காட்சியகத்தின் ஒரு முக்கிய அம்சமாக, சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜ சோழனின் 125 அடி உயரச் சிலை அமையவுள்ளது.
  • நாவாய் அருங்காட்சியகம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தில் அமையவுள்ளது.
  • அழகன்குளத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் இதன் கருப்பொருளாக இருக்கும்.
  • நாவாய் என்பது பண்டைய தமிழில் ஒரு பெரிய கப்பலைக் குறிக்கும்.
  • பிற்காலச் சோழர்களின் கடல் வெற்றி, சோழ மன்னர்களால் பின்பற்றப்பட்ட ஒரு நீடித்த கடற்படைக் கொள்கைக்குத் தெளிவான சான்றாக நிற்கிறது.
  • சங்க காலத்தின் முற்காலச் சோழர்களும் இந்தியக் கடல்களில் கடல் வர்த்தகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகித்தனர் என்று வரலாற்றாசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார்.
  • பாண்டியர்களும் கடல்சார் வணிகத்தில் சிறந்து விளங்கினர்.
  • இதற்கான வரலாற்று அடிப்படை, அழகன்குளத்தில் இருந்து கிடைத்த விரிவான தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் உள்ளது.
  • இது வைகை ஆறு மற்றும் வங்காள விரிகுடாவின் சங்கமத்தில் அமைந்துள்ள ஒரு பழங்காலத் துறைமுகமாகும்.
  • கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில், இந்தத் துறைமுகம் தென்னிந்தியாவை ரோம், எகிப்து மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் ஒரு முக்கியப் பாண்டிய வர்த்தக மையமாகச் செயல்பட்டது.
  • மிகவும் குறிப்பிடத்தக்க காட்சிப் பொருட்களில் ஒன்றாக மூன்று பாய்மரக் கப்பலின் செதுக்கப்பட்ட உருவத்தைக் கொண்ட ஒரு அரிய மட்பாண்ட ஓடான 'கப்பல் கீறல் சித்திரம்' இருக்கும் என்பதோடு இது மேம்பட்ட கடல்சார் மரபுகளுக்குப் பொருள்சார் சான்றுகளை வழங்குகிறது.
  • ரோமானிய ஆம்போராக்கள், அரெட்டைன் மட்பாண்டங்கள் மற்றும் சிலுவை பொறிக்கப்பட்ட முத்திரை உட்பட, அந்தத் தளத்திலிருந்து மீட்கப்பட்ட 13,000-க்கும் மேற்பட்ட பழம்பொருட்கள், தொலைதூரத் தொடர்புகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு வர்த்தகக் குடியிருப்பைச் சுட்டிக் காட்டுகின்றன.
  • நொய்யல் அருங்காட்சியகம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் அமைந்துள்ளது.
  • கொடுமணலில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் இதன் கருப்பொருளாக இருக்கும்.
  • சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் கொடுமணல், கொடுமனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொடுமணல், கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஒரு பல்துறைத் தொழில்கள் கொண்ட குடியிருப்பாகச் செயல்பட்டது. இந்தத் தளம், பெரில், கார்னிலியன், அகேட், குவார்ட்ஸ், லாபிஸ் லாசுலி மற்றும் சபையர் கற்களால் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மணிகளுடன், விலை மதிப்பற்ற கற்களால் ஆன மணிகள் தயாரிப்பதற்கான ஒரு முக்கிய மையமாக இருந்தது.
  • பெரில் கல் அருகிலுள்ள படியூரிலிருந்து உள்ளூரிலேயே பெறப்பட்டாலும், லாபிஸ் லாசுலி என்பது ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதோடு இது விரிவான நீண்ட தூர வர்த்தக வலைப்பின்னல்களைச் சுட்டிக்காட்டுகிறது.
  • தமிழ்நாட்டிலேயே தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளின் மிகப்பெரிய தொகுப்புகளில் ஒன்றையும் கொடுமணல் தளம் வழங்கியுள்ளது.
  • கூடுதலாக, இந்த அருங்காட்சியகம், கார்னிலியன் மணிகள் மற்றும் இரும்பு வாள்கள் போன்ற மதிப்புமிக்க ஈமப்பொருட்களுடன் கூடிய நெடுங்கற்கள் மற்றும் கற்பதுகைக் கல்லறைகள் உள்ளிட்ட இப்பகுதியின் பெருங்கற்காலப் புதைகுழிக் கலாச்சாரத்தை காட்சிப்படுத்தும்.
  • பண்டைய இலக்கியங்களில் திருக்கடல்மல்லை என்று அறியப்படும், தமிழ்நாட்டின் பழமையான துறைமுக நகரமான மாமல்லபுரம், பல நூற்றாண்டுகளாக கடல்சார் வலிமையின் சக்திவாய்ந்த சின்னமாகத் திகழ்கிறது.
  • சங்க காலம் முதல் செழித்து வளர்ந்து, கி.பி. 6 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் அதன் கட்டிடக்கலை உச்சத்தை அடைந்த இந்த நகரம், வர்த்தகம் மற்றும் பயணத்திற்கான மையமாக மட்டுமல்லாமல், தமிழ் பிராந்தியத்தை இலங்கை, தென்கிழக்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள தொலைதூர நாகரிகங்களுடன் இணைக்கும் ஒரு முக்கியப் பாலமாகவும் செயல்பட்டது.
  • இந்த அருங்காட்சியகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள பீச் ரிசார்ட் வளாகத்தில் அமைக்கப்படும்.
  • தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டையில், நடுகற்களை மையக் கருத்தாகக் கொண்டு தர்மபுரி அருங்காட்சியகத்தை அமைக்க மாநில அரசு முன்மொழிந்துள்ளது.
  • இந்த நடுகல், பண்டையத் தமிழ் சமூகங்களின் சமூக, வரலாற்று மற்றும் கலைப் பழக்கவழக்கங்கள் குறித்த நுண்ணறிவை வழங்கும் ஒரு முக்கியமான தொல்பொருள் கலைப்பொருளாகும்.
  • தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் கட்டப்பட்டு வரும் குற்றாலம் அருங்காட்சியகத்தில், திருமலபுரம் மற்றும் ராஜகால்மங்கலம் ஆகிய இடங்களில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் இடம் பெறும்.
  • திருவண்ணாமலையில் உள்ள தமிழ் கலாச்சார அருங்காட்சியகம் மற்றும் சென்னையில் எழும்பூரில் உள்ள சிந்துவெளி கலைக்கூடம் அருங்காட்சியகம் ஆகியவை முன்மொழியப்பட்ட இதர மற்ற அருங்காட்சியகங்களில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்