தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாரை நீக்குவதற்கான தீர்மானத்தை மாநிலங்களவைத் தலைவர் மற்றும் மக்களவைத் தலைவர் ஆகியோர் நிராகரித்தனர்.
இந்தத் தீர்மானத்தில் 130 மக்களவை உறுப்பினர்களும், 63 மாநிலங்களவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டு 2026 ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று சமர்ப்பித்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் முறை அரசியலமைப்பின் சரத்து 324(5)-இன் படி, உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் முறைக்கு இணையானது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் நீக்கம், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் நீக்கத்திற்குப் பின்பற்றப் படும் அதே நடைமுறையையே பின்பற்றுகிறது.
அவைத் தலைவர்கள், 1968 ஆம் ஆண்டு நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் 3 ஆம் பிரிவை மேற்கோள் காட்டினர்.
நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது திறமையின்மை மட்டுமே நீக்கத்திற்கான காரணங்களாக இருக்க முடியும்.
இந்தத் தீர்மானத்தில் குறைந்தபட்சம் 100 மக்களவை அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
இரு அவைகளிலும் ஒப்புதல் அளித்த பிறகு, இறுதி நீக்க உத்தரவு குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும்.