சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-6- (NFHS-6) 2023-24-இன் தரவுகளின் படி, தமிழ்நாட்டில் தாய் மற்றும் குழந்தை சுகாதாரக் குறியீடுகளில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
99.7% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ளன, மேலும் 87.6% தாய்மார்கள் குறைந்தது நான்கு முறை மகப்பேறுக்கு முற்பட்ட பரிசோதனைகளைப் பெற்றுள்ளனர்.
12 முதல் 23 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளில் 90% பேருக்கு முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் ரோட்டா வைரஸ் தடுப்பூசி செலுத்துதல் 66.4% இலிருந்து 87.4% ஆக உயர்ந்துள்ளது.
குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறியீடுகள் மேம்பட்டுள்ளதுடன் வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை 25.0% என்ற அளவிலிருந்து 20.7% ஆகவும், கடுமையான எடைக் குறைவு / மெலிதல் 5.5% இலிருந்து 4.9% ஆகவும் குறைந்துள்ளது.
இருப்பினும், 54.8% பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் புகட்டப்பட்டுள்ளது, மற்றும் ஆறு மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளில் 55.6% குழந்தைகளுக்கு மட்டுமே பிரத்தியேகமாக தாய்ப்பால் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) NFHS-5-இல் இருந்த 1.8 என்ற அளவிலிருந்து ஒரு பெண்ணுக்கு 1.7 குழந்தைகளாகக் குறைந்துள்ளது.