தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம் கூகூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் சங்ககாலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நீர்ப்பாசன அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தொல்லியல் துறையானது (ASI) செங்கல் மற்றும் கல் அமைப்புகளை ஆய்வு செய்து, அவற்றை வரலாற்றுத் தொடக்க காலத்தைச் சேர்ந்த (கி.பி. 3 - 4 ஆம் நூற்றாண்டு) நீர்வரத்துக் கால்வாயாக இருக்கலாம் என அடையாளம் கண்டுள்ளது.
அரை வட்ட வடிவ செங்கல் சுவர் மற்றும் கால்வாய் திறப்பை உருவாக்கியிருக்கக் கூடிய நீரில் மூழ்கிய இரண்டு இணைச் சுவர்கள் உட்பட இரண்டு அமைப்புகள் காணப் பட்டன.
வெளிப்படுத்தப்பட்ட அமைப்பு சுமார் 2 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்டது, மேலும் இது நீர் மேலாண்மைக்கான மதகு அல்லது உள்வரும்/வெளியேறும் கால்வாயாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
பெரிய செங்கற்கள் மற்றும் கட்டுமான முறை காவேரிப்பட்டினம் (பூம்புகார்) அருகே வானகிரியில் காணப்பட்ட பழங்கால நீர் மேலாண்மை அமைப்பை ஒத்திருக்கிறது.