திரைப்படத் தணிக்கை வாரியத்தின் புதிய தலைவராக : பிரசூன் ஜோஷி நியமனம்
August 12 , 2017 2914 days 1230 0
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (சி.பி.எஃப்.சி / CBFC ) தலைவர் பதவியில் இருந்து பஹலாஜ் நிஹலானியை மத்திய அரசு நீக்கியுள்ளது. அவருக்குப் பதிலாக அப்பதவிக்கு தேசிய விருது பெற்ற பாலிவுட் பாடலாசிரியரான பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான பஹலாஜ் நிஹலானி கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். அவர் இப்பதவியை வகித்த கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக அவர் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாக தணிக்கை வாரியத்தின் மற்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
அண்மையில், பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கிய, நெருக்கடி நிலை காலத்தைச் சித்திரிக்கும் 'இந்து சர்க்கார்' என்ற படத்தில் வெவ்வேறு இடங்களில் காட்சிகளை வெட்டுமாறு தணிக்கை வாரியம் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், 'லிப்ஸ்டிக் அண்டர் மை பர்க்கா' என்ற படத்தைத் திரையிட தணிக்கை வாரியம் அனுமதி மறுத்ததும் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து பஹலாஜ் நிஹலானியை மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் நீக்கியது. அப்பொறுப்புக்கு பிரபல பாலிவுட் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.