மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை (National Population Register - NPR) புதுப்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.
NPR என்பது நாட்டில் உள்ள வழக்கமான குடியிருப்பாளர்களின் விவரங்கள் அடங்கிய ஒரு மொத்தப் பதிவேடு ஆகும்.
NPR தரவுதளத்தில் மக்கள்தொகை மற்றும் உயிர்த்தரவு விவரங்கள் இருக்கும்.
NPR விதிமுறைகளின் படி, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒரு வசிப்பிட அடையாள அட்டை (Resident Identity Card - RIC) வழங்கப் படும்.
இது நாட்டில் உள்ள அனைத்து மக்களின் விரிவான அடையாள தரவுதளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் மற்றும் 2003 ஆம் ஆண்டின் குடியுரிமை (குடிமக்களைப் பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் வெளியீடு) விதிகள் ஆகியவற்றின் கீழ் உள்ளூர் (கிராமம்/துணைநிலை நகரம்), துணைநிலை மாவட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் தயாரிக்கப் படுகின்றது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரும் NPRல் பதிவு செய்வது கட்டாயமாகும்.
NPR இன் நோக்கங்களுக்காக ஒரு குடியிருப்பாளர் என்பவர் கடந்த 6 மாதங்கள்/அதற்கு மேற்பட்ட காலத்திற்கு உள்ளூர்ப் பகுதியில் வசித்த ஒரு நபர் அல்லது அடுத்த 6 மாதங்கள்/அதற்கு மேற்பட்ட காலத்திற்கு அந்த பகுதியில் வசிக்க விரும்பும் ஒரு நபர் என வரையறுக்கப் படுகின்றார்.