மின்சார அமைச்சகம் ஆனது, 2026 ஆம் ஆண்டு தேசிய மின்சாரக் கொள்கை (NEP) வரைவைப் பொதுமக்களின் ஆலோசனைக்காக வெளியிட்டது.
இந்தக் கொள்கை NEP 2005 கொள்கைக்கு மாற்றாக அமைகிறது மற்றும் 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மின் உற்பத்தித் துறையை மாற்றுவதற்கான ஒரு செயல் திட்டத்தினை அமைக்கிறது.
இந்தியா 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பொதுவான வீட்டு மின் வசதி வழங்கலை அடைந்தது மற்றும் 2013 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த தேசிய மின் கட்டமைப்பை இயக்கி வருகிறது.
தனிநபர் மின்சார நுகர்வை 2030 ஆம் ஆண்டுக்குள் 2,000 kWh ஆகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் 4,000 kWh ஆகவும் உயர்த்துவது இதன் இலக்குகளில் அடங்கும்.
2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 2005 ஆம் ஆண்டு நிலைகளிலிருந்து 45% குறைத்து 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர சுழியப் பசுமை இல்ல வாயு உமிழ்வை அடைவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரித்தல், மின் கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை ஊக்குவித்தல், மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்புகளைக் குறைத்தல் மற்றும் மின் கட்டமைப்பை நவீனமயமாக்குதல் ஆகியவை முக்கியச் சீர்திருத்தங்கள் ஆகும்.
சேமிப்பு அடிப்படையிலான நீர் மற்றும் அனல்மின் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவதுடன், அணுசக்தி திறன் உருவாக்கத்திற்கான இலக்கு 2047 ஆம் ஆண்டுக்குள் 100 GW ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.