சத்தீஸ்கர் அரசானது 2008 ஆம் ஆண்டின் தேசிய புலனாய்வுச் சட்டத்திற்கு (National Investigation Act - NIA) எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இச்சட்டமானது இந்திய அரசியலமைப்பை மீறுவதாக அம்மாநிலம் கூறியுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளில் அரசியலமைப்பின் 131வது பிரிவின் கீழ் ஒரு மத்திய அரசின் சட்டத்தை ஒரு மாநில அரசு எதிர்க்க முயல்வது இது இரண்டாவது நிகழ்வாகும்.
சமீபத்தில் கேரள அரசு குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
NIA சட்டம் பற்றி
இந்தச் சட்டமானது இந்தியாவின் முதன்மையான பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் செயல்பாடுகளை நிர்வகிக்கின்றது.
இச்சட்டமானது 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்டது.
இது இந்தியாவின் எந்தவொருப் பகுதியிலும் பயங்கரவாத நடவடிக்கைகளை அறிந்து நடவடிக்கை எடுக்கவும் வழக்குப் பதிவு செய்யவும் மாநில அரசின் அனுமதியின்றி எந்தவொரு மாநிலத்திற்குள்ளும் நுழையவும் அம்மாநில மக்களை விசாரிக்கவும் மற்றும் அவர்களைக் கைது செய்யவும் NIAவிற்கு அதிகாரங்களை வழங்குகின்றது.
“காவல் துறையானது” இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் உள்ளது.
2019 ஆம் ஆண்டின் NIA திருத்தச் சட்டமானது புலனாய்வு அமைப்பு விசாரித்து, வழக்குத் தொடரக்கூடிய குற்றங்களின் வகையை விரிவுபடுத்தியுள்ளது.
தற்பொழுது இந்த அமைப்பானது ஆள் கடத்தல், கள்ள நோட்டுப் புழக்கம், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்தல் அல்லது விற்பனை செய்தல், இணைய வழிப் பயங்கரவாதம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் 1908ன் கீழ் உள்ள குற்றங்கள் ஆகியவை குறித்து விசாரிக்கும்.
மேலும் 2019 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்தச் சட்டமானது (Unlawful Activities (Prevention) Amendment - UAPA) ஒரு மாநில காவல்துறைத் தலைவரின் முன் அனுமதியின்றி பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் சோதனை நடத்தவும் ஒரு NIA அதிகாரியை அனுமதிக்கின்றது.
குற்றத்தை விசாரிக்கும் விசாரணை அதிகாரிக்கு NIAன் பொது இயக்குநரின் அனுமதி மட்டுமே தேவைப்படுகின்றது.