தொகுதி மறுசீரமைப்பு மசோதா, 2026 – முக்கிய அம்சங்கள்
April 19 , 2026 15 hrs 0 min 41 0
உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026, தொகுதிகளை மறு வரையறை செய்வதற்கான தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டுகிறது.
மத்திய அரசால் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்படுவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய அல்லது முன்னாள் நீதிபதி இந்த ஆணையத்திற்குத் தலைமை தாங்குவார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) அல்லது தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப் படும் ஒரு தேர்தல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் 5 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் என 10 இணை உறுப்பினர்கள் இதில் இருப்பார்கள்; இவர்கள் இந்த ஆணையத்திற்கு உதவுவார்கள், ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை இருக்காது.
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கான மக்களவை இடங்களின் ஒதுக்கீடு, மாநிலச் சட்டப்பேரவைகளின் மொத்த பலம், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்தல் ஆகியவற்றை இந்த ஆணையம் முடிவு செய்யும்.
பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மற்றும் பெண்களுக்கான தனித் தொகுதிகளையும் இது அடையாளம் காணும்.
இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக, பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்காக வரைவு முன்மொழிவுகள் வெளியிடப்படும்.
இந்திய அரசிதழில் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆணையத்தின் உத்தரவுகள் சட்டப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெறும், மேலும் அவற்றை எந்த நீதிமன்றத்திலும் எதிர்த்து முறையீடு செய்ய முடியாது.
இந்தியக் குடியரசுத் தலைவர் குறிப்பிடும் தேதியிலிருந்து இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வரும்.
இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிறகு நடைபெறும் தேர்தல்களுக்கு இந்தப் புதிய தொகுதி எல்லைகள் பொருந்தும்.
இந்த ஆணையம் ஒரு உயர்மட்ட அமைப்பாகும், இதன் முடிவுகள் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை மற்றும் இறுதியானவை.
இதன் உத்தரவுகள் மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் சமர்ப்பிக்கப் படும், ஆனால் அவர்களால் அதில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது.