மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்த கூற்றைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர் (அ) பாராளுமன்ற உறுப்பினர்கள் சில சலுகைகளைக் கொண்டிருப்பர் எனினும் ஆனால் அவற்றில் பெரும்பாலனவை பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடப்பில் இருக்கும் போது மட்டுமே கிடைக்கும்.
பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறாத போது, காவல் துறை (அ) பிற சட்ட அமலாக்க முகவர்கள் மத்திய அமைச்சரவையின் அமைச்சரை ஒரு குற்றவியல் வழக்கில் கைது செய்யலாம்.
ஆனால் மாநிலங்களவையின் நடைமுறைகள் மற்றும் பணி நடத்தை விதிகளின் 222A என்ற பிரிவின் கீழ், கைது செய்யப்படுவதற்கான காரணம் மற்றும் இடம் குறித்து மாநிலங்களவைத் தலைவரிடம் காவல் துறையோ (அ) கைது உத்தரவினைப் பிறப்பிக்கும் நீதிபதியோ தெரிவிக்க வேண்டும்.
அவைத் தலைவர் இதனை மாநிலங்களவையில் வெளியிடுவார்.
குறிப்பு
பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு 40 நாட்கள் முன்பும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் மற்றும் அது நிறைவுற்ற பிறகு 40 நாட்கள் வரையிலும் ஒரு மத்திய அமைச்சர் (அ) பாராளுமன்ற உறுப்பினர் தாம் கைது செய்யப் படுவதில் இருந்து பாதுகாப்பினைப் பெறுகிறார்.
எனவே உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் 135வது பிரிவின் கீழ், பாராளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் முடிவடைந்ததால் ஒரு குடிமையியல் வழக்கில் கைது செய்யப்படுவதிலிருந்து நாராயண் ரானே பாதுகாப்பு பெறுகிறார்.
எனினும், அவரது இந்த கைது குற்றவியல் வழக்கில் உள்ளதாகும்.
மேலும் கைதிலிருந்துப் பாதுகாப்பு பெறுதல் எனும் சலுகையானது குற்றவியல் குற்றங்கள் அல்லது தடுப்புக் காவல்களிலிருந்துப் பாதுகாப்பு வழங்காது.