பல்கலைக்கழக மானியக் குழு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியினைக் கோரும் கல்வி நிலையங்களுக்கு புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த புதிய விதிமுறைகள் ஏற்கெனவே இருக்கும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் தங்கள் தகுதியினை தக்க வைத்துக் கொள்வதற்காக பொருந்தும்.
இதில் முதல் விதிமுறை என்பது கல்வி நிறுவனம் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு ஆகிய நிலைகளில் படிப்புகளை அளிக்க வேண்டும்.
இரண்டாவதாக, நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்க வேண்டி விண்ணப்பிக்கும் ஒரு கல்வி நிறுவனம் குறைந்தது இருபது வருடங்களாவது நடைமுறையில் இருக்க வேண்டும்.
மேலும் அந்நிறுவனம் தொடர்ச்சியாக மூன்று சுழற்சிப் பருவங்களுக்கு குறைந்தது 3.26 ஒட்டுமொத்த தகுதிப் புள்ளிகளின் சராசரியுடன் (CGPA – Cumulative Grade Points Average) தேசிய மதிப்பீட்டு மற்றும் தரச்சான்றுக் குழுவினால் ஒரு தகுந்த அங்கீகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுத்த வரையில் தகுதியுடைய தொழில்நுட்ப பயிற்சிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேசிய அங்கீகார மன்றத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.