பட்டியல் சாதியினர்/பட்டியல் பழங்குடியினருக்கான சலுகைப் பிரிவு
August 15 , 2026 3 days 51 0
இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தொகுதி மனுக்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் (OBC) போலவே, பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) ஆகிய இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் சலுகைப் பிரிவு விலக்கைக் கோருகின்றன.
"பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு சலுகைப் பிரிவுக் கொள்கைகள் பொருந்தாது" என்று நீதித்துறை முன்னுதாரணங்கள் தெளிவுபடுத்தியுள்ளன என மத்திய அரசு வாதிட்டது.
மேலும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஒரு பிரமாணப் பத்திரத்தில் உச்ச நீதிமன்றத்திடம் இதைத் தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசின் கீழ் உள்ள சேவைகளில் இட ஒதுக்கீட்டைத் தவிர, பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான "பெரும்பாலான" நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில், "திட்டங்களின் பலன்கள் உண்மையில் தகுதியானவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் வருமானத் தகுதிச் சோதனை" ஏற்கனவே உள்ளது.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றம் செய்வது, குறிப்பாக இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்குள் வருமான அடிப்படையிலான முன்னுரிமைகளை அறிமுகப் படுத்துவது, இட ஒதுக்கீட்டுப் பிரிவு பயனாளிகளின் சமூக-பொருளாதாரத் தரவுகள் உட்பட, ஒரு முழுமையான ஆய்வு மற்றும் ஆழ்ந்த அனுபவ ஆய்வுக்குப் பின்னரே செய்யப்பட வேண்டும்.
பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் முக்கிய நோக்கம், “சமூக சமத்துவம் மற்றும் சமூக நீதியை அடைவது, வரலாற்று ரீதியான பாதகங்களையும் பாகுபாடுகளையும் களைவது, விளிம்புநிலை சமூகங்களுக்குப் பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வது, மற்றும் கல்வி, பொதுச் சேவைகள், முடிவெடுக்கும் செயல்முறைகளில் அவர்களின் முழுமையான பங்கேற்பை ஊக்குவிப்பது” ஆகியனவாகும்.
பட்டியலிடப்பட்ட சாதியினர்/பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு வருமான அடிப்படையிலான ‘கிரீமி லேயர்/உயரடுக்கு பிரிவினர்’ முறையைக் கோரும் தற்போதைய விவகாரம், அரசியலமைப்புச் சட்டப் பிரச்சினையை எழுப்பவில்லை என்றும், அரசியலமைப்பின் கீழ் உள்ள எந்தவொரு அடிப்படை உரிமையையும் மீறுவதாக அமையவில்லை என்றும் அரசு கூறியுள்ளது.
எம். நாகராஜ் வழக்கில் மேற்கோள் காட்டப்பட்ட தீர்ப்பு, ‘கிரீமி லேயர்/உயரடுக்கு பிரிவினர்’ என்ற கருத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தது என்றும், அது இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு “பொதுவான கருத்தாக”த் தோன்றுகிறது என்றும் மத்திய அரசு கூறியது.
பஞ்சாப் மாநிலம் எதிர் தேவிந்தர் சிங் வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு 2024-ல் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு, பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் ‘கிரீமி லேயர்’ முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற வாதம் வேகம் பெற்றது.
அந்தத் தீர்ப்பில், ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBCs) அளவுகோல்களிலிருந்து வேறுபட்டிருந்தாலும், பட்டியலிடப்பட்ட சாதியினர் (SCs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான (STs) ஒரு சிறந்த பிரிவை அடையாளம் காண அரசாங்கம் ஒரு வழியைக் கண்டறிய வேண்டும் என்று தனது கருத்தில் குறிப்பிட்டிருந்தார்.
2024 ஆம் ஆண்டின் தீர்ப்பு, பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை துணைப் பிரிவுகளாகப் பிரிக்கும் கொள்கையைத் தொடர மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்திருந்தது.
SC மற்றும் ST பட்டியல்களில் சமூகங்களைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், இது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இருப்பினும், பட்டியல்களில் சமூகங்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கும், ஏற்கனவே உள்ள பட்டியல்களுக்குள் சமூகங்களை வகைப்படுத்துவது தொடர்பான நிர்வாகத் துறையின் அதிகாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை 'தவிந்தர் சிங்' (Davinder Singh) தீர்ப்பு சுட்டிக் காட்டியுள்ளது.