பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அரசியல் கட்சிகள்
August 13 , 2025 15 hrs 0 min 83 0
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட 23 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை அதன் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
அவற்றில் 22 கட்சிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை, ஒரு கட்சி புதுச்சேரியைச் சேர்ந்தது.
நாடு முழுவதும் மொத்தம் 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இந்தக் கட்சிகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடத் தவறியதன் அடிப்படையில் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தல்களில் பங்கேற்காததற்கு விளக்கம் அளிக்கக் கோரி தமிழ்நாட்டில் உள்ள இதுபோன்ற 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியது.
திருப்திகரமான பதில் கிடைக்காததால், அவற்றில் 23 கட்சிகள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டன.
நீக்கப்பட்ட கட்சிகள், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29B மற்றும் 29C ஆகிய பிரிவுகளின் கீழ் சலுகைகளுக்கான உரிமையை இழக்கின்றன.
இந்தக் கட்சிகள் 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி தொடர்பான சலுகைகளையும் இழந்தன.
1968 ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் முன் ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு ஆணையின் கீழான சலுகைகளுக்கு அவை தகுதியற்றவைகளாக அறிவிக்கப்படும்.