தேசியப் பல்லுயிர் ஆணையம் (NBA), மூன்று ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 33 மாநில பல்லுயிர் வாரியங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச பல்லுயிர் மன்றங்களுக்கு ₹8.22 கோடி நிதியை விடுவித்துள்ளது.
இது, அரிசிக்கான மிகப்பெரிய ஒற்றை அணுகல் மற்றும் பயன் பகிர்வு (ABS) நிதி ஒதுக்கீடுகளில் ஒன்றாகும்.
இந்த நிதி ஒதுக்கீடு, நாட்டின் உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்களை நியாயமாகவும் சமமாகவும் பகிர்வதை உறுதி செய்வதில் இந்தியாவின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த நிதியை, மரபணு வளப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், விதை சேகரிப்புகளைப் பராமரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு ஆதரவளிக்கவும் பயன்படுத்தும்.
மாநில பல்லுயிர் வாரியங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச பல்லுயிர் மன்றங்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும். இதில், உள்ளூர் பயிர் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், சூழல் மண்டலங்களை மீட்டெடுத்தல், பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்துதல் மற்றும் உள்ளூர் விவசாயிகள் மற்றும் பாரம்பரிய அறிவு உள்ளவர்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவை அடங்கும்.
இது, மரபணு வளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய அறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை நியாயமாகவும் சமமாகவும் பகிர்வதை ஊக்குவிக்கும் குன்மிங்-மான்ட்ரியல் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பின் இலக்கு 13-ஐ ஆதரிக்கிறது.
மேலும் இது, SDG 2 (பசியின்மை), SDG 12 (பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி), SDG 15 (நிலத்தில் வாழ்வு) மற்றும் SDG 17 (இலக்குகளுக்கான கூட்டாண்மை) உள்ளிட்ட பல நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கும் பங்களிக்கிறது.
NBA என்பது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ், 2002-ஆம் ஆண்டின் பல்லுயிர் சட்டத்தின்படி நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
இது இந்தியாவின் உயிரியல் வளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய அறிவை அணுகுவதை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நாகோயா நெறிமுறையின் நியாயமான மற்றும் சமமான நன்மைப் பகிர்வுக் கொள்கையைச் செயல்படுத்துகிறது.
CBD உடன்படிக்கை
உயிரியல் பன்முகத்தன்மை மீதான உடன்படிக்கை (CBD) என்பது 1992 ரியோ புவி உச்சி மாநாட்டில் உருவான ஒரு உலகளாவிய சட்ட ஒப்பந்தமாகும். இது மூன்று முக்கிய இலக்குகளைக் கொண்டுள்ளது - உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல்; அதன் கூறுகளின் நீடித்த பயன்பாடு; மற்றும் மரபணு வளங்களிலிருந்து எழும் நன்மைகளை நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்துகொள்ளுதல்.
இந்த உடன்படிக்கையை அங்கீகரிக்காத ஒரே ஐ.நா. உறுப்பு நாடு அமெரிக்கா ஆகும்.
இது கார்டஜெனா நெறிமுறை மற்றும் நகோயா நெறிமுறை என இரண்டு துணை ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.
உயிரியல் பன்முகத்தன்மை மீதான உடன்படிக்கையின் உயிரிப் பாதுகாப்பு மீதான கார்டஜெனா நெறிமுறை என்பது, நவீன உயிரித் தொழில்நுட்பத்தின் விளைவாக உருவாகும் உயிருள்ள மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் (LMOs) ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குக் கொண்டு செல்லப்படுவதை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
உயிரியல் பன்முகத்தன்மை மீதான உடன்படிக்கையின் மரபணு வளங்களுக்கான அணுகல் மற்றும் அவற்றின் பயன்பாட்டிலிருந்து எழும் நன்மைகளை நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்துகொள்ளுதல் (ABS) மீதான நகோயா நெறிமுறை என்பது CBD-க்கான மற்றொரு துணை ஒப்பந்தமாகும்.