பாரத ஸ்டேட் வங்கியுடன் துணை வங்கிகள் இணைப்பை அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றம்
August 11 , 2017 2993 days 1656 0
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டதை அங்கீகரிக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர், ஜெய்ப்பூர் (எஸ்பிபிஜே), ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் (எஸ்பிஹெச்), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (எஸ்பிஎம்), ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா (எஸ்பிபி), ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் (எஸ்பிடி) ஆகிய 5 வங்கிகளும், பாரதிய மகிளா வங்கியும் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இணைக்கப்பட்டன.
இந்த இணைப்பின் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 37 கோடியாகவும், வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 24 ஆயிரமாகவும் உயர்ந்தது. இந்நிலையில், இந்த இணைப்பை அங்கீகரிக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, கடந்த 1959-ஆம் ஆண்டைய எஸ்பிஐ (துணை வங்கிகள்) சட்டம், 1956-ஆம் ஆண்டைய ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் சட்டம் ஆகியவற்றை நீக்குவதற்கும், பாரத ஸ்டேட் வங்கிச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்வதற்கும் வழிவகுக்கிறது.
எஸ்பிஐ-யுடன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் சிறந்த 50 வங்கிகளின் பட்டியலில் எஸ்பிஐ இடம்பிடித்துள்ளது. உலக அளவில் 45-ஆவது இடத்தில் எஸ்பிஐ உள்ளது.