2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம், பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடைமுறைக்கு ஆதாரை 12வது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆவணமாகக் கருதுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) உத்தரவிட்டது.
ஆதாரை இந்தியக் குடியுரிமைக்கான சான்றாக அல்ல, அடையாளச் சான்றாக அல்லது வசிப்பிடச் சான்றாக மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியது.
தேர்தல் பதிவு அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) உட்பட அனைத்துத் தேர்தல் அதிகாரிகளும், கோரிக்கைகள் அல்லது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கு ஆதாரை ஏற்றுக் கொள்ளுமாறு ECI அறிவுறுத்த வேண்டும்.
குடும்ப அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற பிற ஆவணங்களைப் போலவே, ஆதாரின் நம்பகத்தன்மையை அதிகாரிகளால் சரி பார்க்க முடியும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
பீகாரில் மொத்தம் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில் ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் விலக்கப் பட்டுள்ளனர்.
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான காலக்கெடு ஆனது செப்டம்பர் 01 ஆம் தேதி என்றாலும், அந்தத் தேதிக்குப் பிறகு சமர்ப்பிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று ECI பின்னர் தெளிவுபடுத்தியது.
ஆதாரைச் சமர்ப்பிக்கும் உரிமை குறித்து வாக்காளர்கள் அறிந்திருப்பதை உறுதி செய்ய, இந்த உத்தரவு குறித்து பரந்த விளம்பரம் அளிக்குமாறு ECI ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.