அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மாற்றுவதற்காக, 2025 ஆம் ஆண்டு வருமான வரி (எண். 2) மசோதாவினை பாராளுமன்றம் நிறைவேற்றியது.
தற்போதைய வரி விகிதங்களை மாற்றாமல் வரி நிர்வாகத்தினை நவீன மயமாக்குவதை இப்புதிய சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மதிப்பீட்டு ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த கால முறை சார்ந்த வரி ஆண்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் இது அதனை மிகவும் எளிதாக்குகிறது.
இந்த மசோதாவில் 536 பிரிவுகள் மற்றும் 16 அட்டவணைகள் உள்ளன.
47 ஆக இருந்த அத்தியாயங்களின் எண்ணிக்கையானது 23 ஆகவும், 819 ஆக இருந்த பிரிவுகளின் எண்ணிக்கையானது 536 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அபராதம் இல்லாமல் தாமதமாக வருமானம் தாக்கல் செய்யப்பட்டாலும், தனிநபர்கள் வருமான வரிப் பிடித்தத்தில் (TDS) பிடிக்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற இது வழி வகுக்கிறது.
இது வருமான வரி அதிகாரிகளின் அதிகாரங்களை விரிவுபடுத்துவதோடு, ஆய்வு நடவடிக்கைகளின் போது மதிப்பீட்டாளர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளை வலுக்கட்டாயமாக திறந்து ஆய்வு செய்ய அனுமதிக்கிறது.